பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

 ஆகியோர் தரநிர்ணயம் செய்யத்தக்க நிலைமை இப்போது ஏற்பட்டிருப்பதாக அபிப்ராயப்பட்டார்கள்.

இன்றைய விமர்சனத் துறையில்

இன்று, தமிழ் இலக்கிய விமர்சனதுறையில் க.நா.சுப்ரமண்யம் என்ற பெயர் குறிப்பிடத் தக்கது. பொதுவாக தொட்டாற்சுருங்கி சுபாவமுள்ள பல எழுத்தாளர்களது கோபத்தை சம்பாதித்து, இன்னின்ன புஸ்தகம் இலக்கிய மதிப்பு வாய்ந்தது அல்ல என்று சொல்லும் துணிச்சல் கொண்ட விமர்சகர்களோ மதிப்புரைக்காரர்களோ அவரைப்போல இல்லை எனலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கிய விமர்சன முறையைக் கையாளும்விமர்சகர்.அவர் ஒருவர்தான். அந்த முறை இலக்கிய சரித்திரரீதி விமர்சனமுறையாகும். அவரது தற்கால இலக்கிய சரித்திரக் கட்டுரைகள் பல தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப்பட்டவை; இன்றைய தமிழ் இலக்கியம் பற்றி நாமும், பிற இந்திய மொழிக்காரர்களும் வெளி நாட்டாரும் அறியச் செய்திருக்கின்றன. வெகு சமீபத்தில் திருக்குறளின் இலக்கிய அந்தஸ்து பற்றிய ஒரு அபிப்ராயத்தை அவர் வெளியிட்டு பண்டிதர்களை திடுக்கிடச் செய்தார். வ.ரா. வைப் போலவே இவருக்கும் பண்டிதர்கள் முக்கிய எதிரிகள். 'படித்திருக்கிறீர்களா' என்ற அவரது புஸ்தகம், பலதரப்பட்ட நூல்களை வாசகர்கள் பரிச்சயம் செய்து கொள்ள ஏதுவாக, புஸ்தகங்களை எடுத்துச் சொல்லி எழுதப்பட்டதாகும். 'முதல் ஐந்து நாவல்கள்' என்ற மற்றொரு புஸ்தகம் இலக்கிய லக்ஷணங்களைக் கொண்டுமுன்னதை விட சற்று மேலான விமர்சன ரீதியில் ஆராயப்பட்ட நூல். இவை இரண்டும் சேர்ந்து எதிர்கால தமிழ் வசன இலக்கிய விமர்சன வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன எனலாம்.

1940ஐ தொடர்ந்த வருஷங்களில் இத்தகைய புஸ்தகங்கள் வந்திருப்பதை நாம் பார்க்கலாம். ஏ.வி.சுப்ரமண்ய அய்யரது 'தற்கால தமிழ் இலக்கியம்' உபயோகமுள்ள தகவல் அறிவிக்கும் நூல். மு. அருணாசலத்தின் 'இன்றைய தமிழ் உரைநடை' என்ற புஸ்தகம் சுவாரஸ்யமாகவும் சிரத்தை எடுத்தும் எழுதப்பட்டிருந்தாலும் தற்காலத்து சிறந்த எழுத்தாளர்களின் உரைநடைகளில் காணப்படும் உயர்ந்த தன்மைகளை கவனத்தில் கொண்டுவரத் தவறிவிட்டது.

99