பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உண்மைதேடியின் அநுபவ
இலக்கிய வடிவங்கள்

தி. ஜானகிராமன்

இருட்டு ரூ.1.25; உயிரின் யாத்திரை ரூ.1;
எம்.வி. வெங்கடராமன் எழுதிய கதைகள்.
வானதிப் பதிப்பகம் :: தி. நகர், சென்னை-17.


பதினைந்து அல்லது பதினாறு வயதில் எம்.வி. வெங்கடராமன் கதைகள் எழுத ஆரம்பித்தவர். ஆனால் அந்தக் கதைகள் ‘மணிக்கொடி'யில் வெளிவந்து கொண்டு இருந்தன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால், அவ்வளவு இளமையில் அவ்வளவு முதிர்ச்சியைக் காண்பது பல நாடுகளிலும், பல காலங்களிலும் மிகவும் துர்லபமான காரியம். இன்றைய எழுத்தில் தலைசிறந்த கலைஞராக விளங்கும் ஒருவர் வெங்கடராமன் கதைகள் தான் என்னை எழுதத்துண்டின என்று இரண்டு மூன்று தடவைஎன்னிடம் சொல்லி பரவசப் பட்டிருக்கிறார். அந்த வெங்கடராமன் எழுதிய சிறுகதைகள் இன்னும் கையெழுத்துகளாகத்தான் இருக்கின்றன. இந்த இருட்டும் 'உயிரின் யாத்திரை'யும் சமீபத்தில் எழுதிய நீண்ட கதைகள்.


சிறுகதை, நாவல், நாடகம் எழுதி இருக்கிறார் ஜானகிராமன். சொந்த ஊர் தஞ்சாவூர். 1921ல் பிறந்தவர். ‘கொட்டுமேளம் ‘சிவப்பு ரிக்ஷா' ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும் 'அமிர்தம்’ என்ற நாவலும் பிரசுரமான புஸ்தகங்கள். மோகமுள் என்ற நாவல் சீரியலாக வெளி வந்திருக்கிறது. ‘மலர் மஞ்சம்’ என்ற நாவல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்து கொண்டிருக்கிறது. நாலுவேலி நிலம் என்ற அவரது மேடை நாடகம் சேவாஸ்டேஜால் நடிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறார். சென்னை ரேடியோவில் கல்வி நிகழ்ச்சி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

102