பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'எழுத்து' சி.சு.செல்லப்பா
--- வல்லிக்கண்ணன்
1


தமிழ் எழுத்துலகில் 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு செல்லப்பாவும் ஒருவர் ஆவார்.

1930களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமிழ் சிறுகதையை உலக இலக்கியத்தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு எழுத்துப்பணியில் ஈடுபட்டார்கள். இளைஞர்கள் சிலர். அவர்களுக்கு 'மணிக்கொடி' என்ற பத்திரிகை களம் அமைத்துக் கொடுத்தது.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ், ராமையா, பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), ந. சிதம்பரசுப்பிரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோர் 'மணிக்கொடியில், அவரவர் ஆற்றலையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று குறிப்பிடப்படலாயினர்.

பின்னர் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைகளுக்கு 'மணிக்கொடி' ஒரு முன்னோடியாக விளங்கியது. குறைவான காலமே அது பிரசுரம் பெற்றிருந்தாலும், எழுத்துலகத்தில் அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரது எழுத்துக்கள் பின்னர் கதை எழுத முற்பட்ட இளைஞர்களை வெகுவாக பாதித்தன.

மணிக்கொடி எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றி ஆழ்ந்த நோக்குடன் புதுமையும் கனமும் சேர்ந்த, உணர்ச்சிகரமான சிறுகதைகளைப் படைத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரது நோக்கும், எழுத்துப்பாணியும், கதைகள் எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட விஷயங்களும் வித்தியாசமானவையாக இருந்தன.

4