பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சி.சு. செல்லப்பா ஒரு காந்தியவாதி என்ற போதிலும் தமது குருநாதர்களான மகாகவி பாரதி, வ.ரா. திரு. வி.க. ஆகியோரின் பாதையில் பொதுவுடைமை இயக்கத்திற்கும் படைப்பாளிகளுக்கும் உரிய மதிப்பளிக்கத் தவறியதில்லை! அவர்களது திறமைகளை ஒருக்காலும் புறக்கணிக்கவில்லை. -

சான்றாக தோழர் ஜீவா அவர்களையும் அவரது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் சி.சு. செல்லப்பா வாயாரப் புகழ்வதுண்டு. "பிரபஞ்சீயம்" (Universalism) என்னும் சொல்லை ஜீவா அடிக்கடி பயன்படுத்துவார். உலகு தழுவிய மானுட நேயம் என்பதை இது குறிக்கும்.

"ஜீவாவின் இந்தச் சொல்லாக்கம் மிகப் புதுமையானது. அருமையானது. பொருள் பொதிந்தது" என்று சி.சு. செல்லப்பா பாராட்டி இருக்கிறார். ஏனெனில் செல்லப்பாவும் தாகூரைப்போல, பாரதியைப்போல, ஒரு உலக, மானுட நேயத்தையும் மானுட விடுதலையையும் போற்றியவர்.

டி. செல்வராஜ், மார்க்ஸிய எழுத்தாளர் என்று தெரிந்திருந்த போதிலும் அவரது மலரும் சருகும் என்ற நாவலை தமது எழுத்து இதழில் மிக நேர்மையுடனும் விரிவாகவும் பாராட்டினார். இது செல்லப்பாவின் நடுநிலை உள்ளத்திற்கும் நியாயமான விமர்சனப் போக்கிற்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இன்றையத் தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் இன்றளவும் செல்வாக்குச் செலுத்திவரும் க.நா.சு, சி.சு. செல்லப்பா ஆகியோரின் வாழ்வும், பணிகளும் நாம் கூர்ந்து ஆராயத்தக்கன. கலை இலக்கியத் துறையில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயம் இது.

112