பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


ஏனெனில் ‘பிடித்தமானது’ என்ற சாக்கில் பொது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளை ‘எழுத்து’ கையாளும் உத்தேசம் இல்லை.

‘எழுத்து’ எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அவர்களைத் தேடும் ‘எழுத்து'.

எழுத்து தன் முன் கொண்டுள்ள பார்வையைப் பற்றிச் சொல்லிவிட்டது. இலக்கிய வாசகர்களின் ஆதரவை எதிர்பார்த்து ஒரு துணிச்சலான முயற்சியாக வரும் எழுத்துக்கு தமிழகம் தன் அரவணைப்பைத் தந்து, அது ஏட்டின் பின் ஏடாக அடுக்கு ஏற வகைசெய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த முதல் ஏடு உங்கள் முன் வைக்கப்படுகிறது.”

- என்று குறிப்பிட்டிருக்கிறார் செல்லப்பா.

செல்லப்பாவோடு நன்கு பழகி, அவரை முழுமையாக அறிந்தவர்களுக்கெல்லாம் தெரியும்; அவர் எதிலும் கறாராகவும் கண்டிப்பாகவும் இருப்பார். எதிரே இருப்பவர் என்ன நினைப்பார் அவருக்கு நாம் சொல்லும் கருத்து பிடிக்குமோ பிடிக்காதோ என்றெல்லாம் யோசிக்காமல் தமக்குச் சரி என்று பட்டதை தயக்கம் சிறிதுமின்றி - பளிச்சென்று அழுத்தம் திருத்தமாகப் பேசுவார்.

அவரது தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லாத இந்தப் போக்குத்தான். அவரது 'எழுத்து' மீது எல்லையற்ற மதிப்புக்கொண்ட பலரையும் - அவரிடம் நெருக்கம் கொள்ள முடியாதபடிக்கு - எட்டியே நிற்க வைத்தது.

எழுத்து முதல் இதழின் ஆசிரிய உரையிலும் செல்லப்பாவின் இந்தத் தனித்துவமும் - கறார் நிலையும் ஆரம்பம் முதல் கடைசி வரையில் பிரதிபலிக்கின்றன.

ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கும் 'எழுத்து'க்கும் என்ன வித்தியாசம்?

“மக்களுக்கு பிடிக்கிறதை நாங்கள்கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக்கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில்

128