பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


கடிதங்கள் எல்லாமே நீளமானவை; ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனக் கட்டுரையாகவே பாவிக்கலாம். எழுதியவர்களும் அல்ப சொல்பமானவர்களல்ல. எல்லோருமே புகழ்பெற்ற எழுத்தாளப் பெருமக்கள். முதல் இதழில் கடிதம் எழுதியிருப்பவர்கள் சிட்டி. வி.ரா.ரா. சாமினாத ஆத்ரேயன், புதுவையிலிருந்து 'தமிழன்’. ஏறத்தாழ நான்கு பக்கங்களுக்கு இந்த நான்கு வாசகர்களின்கடிதங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சாகித்ய அகாடமி ராஜாஜியின் சக்ரவர்த்தித்திருமகன் என்கிற இராமாயண நூலுக்குப் பரிசு வழங்கியது சரியல்ல என்று முதல் இதழில் க.நா.சு. எழுதிய கருத்துக்கு மயிலையிலிருந்து வி.ரா.ரா. எழுதிய பதில் இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம் இன்று சாகித்ய அகாடமி பரிசு விவரம் அறிவிக்கப்பட்டதும் எப்படி -பரிசு பெற்றவர் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்றால் அவரைத் தாக்கித்துளைத்து "அவருக்கு என்ன தெரியும்" என்று விமர்சிப்பதும் - பிடித்தவர் என்றால் “ இந்தப்பரிசே இவரால் பெருமை அடைந்தது" என்று புகழுவதுமான ஒரு போக்கு நிலவுகிறதோ. இது அந்த 50களிலும் இருந்திருக்கிறது என்பதை ராஜாஜியின் நூலை ஆதரித்து வி. ரா.ரா. எழுதிய கடிதம் நிரூபித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

"பரிசு பெற்ற புத்தகம் "சக்கரவர்த்தி திருமகன்" அதன் ஆசிரியர் சக்கரவர்த்திராஜகோபாலாச்சாரியார்; பரிசுகொடுத்தவர்கள் நிர்வாகத்துறையைச்சார்ந்த ஒரு ஸ்தாபனத்தில் இந்த ஸ்தாபனத்தால் பத்திரிகைக்காரர்களும் பேராசிரியர்களும் தவிர இலக்கிய கர்த்தாக்களும் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அந்தக் கர்த்தாக்களின் நூல்களுக்கு யார் பரிசு கொடுப்பது? தாங்களே கொடுத்துக் கொள்வதா? இராமாயணத்தை திருப்பிச் சொன்னதால் மட்டும் ஒருநூலின்தரம் குறைந்துவிடுமென்றால் கம்பனுக்குத்தமிழ் இலக்கியத்தில் இடம் கிடையாது.

இராமாயணத்தைத் தவிர வேறு எதைப்பற்றி எழுதினாலும் பரிசு கிடையாது என்று அகாடமியார் சொல்லும்வரை பொறுத்திருப்போமே! அடுத்தவருஷம் வியாசர்விருந்துக்குத்தான் கொடுப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?

136