பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3


 எழுத்து-மூன்றாவது இதழிலும்-செல்லப்பா ஒரு புதுமையை உருவாக்கிக் காட்டி இருக்கிறார். ‘வாசகர் கடிதங்கள்' பகுதியில் எழுத்து - இரண்டாவது இதழில் வெளியிட்டிருந்த இரண்டு சிறுகதைகள் பற்றி-ஜடாதரன் என்ற எழுத்தாளர்எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து - பொறுப்புணர்ச்சியோடு - தலையங்கப்பகுதியில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார் செல்லப்பா. ஜடாதரன் - எழுத்து இரண்டாவது இதழில் பிரசுரமாகியிருந்த இரண்டு சிறுகதைகளைப் பற்றிக் குறைத்து எழுதியதோடல்லாமல் எழுத்து-விமர்சனம் பற்றிக் கூறுகிற கொள்கையடிப்படையில் உயர்ந்தவைகளை நட்சத்திரக் கதைகளை வெளியிடவேண்டாமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஜடாதரன் குறிப்பிடும் அந்த இரண்டு சிறுகதைகளில் ஒன்று ஜெயகாந்தன் எழுதிய 'தர்க்கம்'. மற்றொன்று பராங்குசம் எழுதிய 'வெற்றியின் பண்பு'.

இந்த இரண்டு கதைகள் பற்றி - ஜடாதரனின் புகாருக்குப் பதிலளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிறுகதை சிறந்ததா, அல்லவா என்பதை நிர்ணயிக்க உதவும் அளவுகோல்கள் எவை என்பது பற்றிய தமது கருத்தை அழகாகக் கூறி இருக்கிறார் செல்லப்பா.

முதலில் ஜடாதரனின் கடிதத்தைப் பார்ப்போம்.

‘ஜெயகாந்தன் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்திருக்கும் புதிய பெயர்களில் ஒன்று என்பதோடு கூட நம்பிக்கையூட்டவல்ல எழுத்துக்கும் பிரதிநிதியாக விளங்குகிறார் என்பதையும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் 'தர்க்கம்' என்ற அவருடைய சிறுகதை ‘எழுத்து' பறைசாற்றிக் கொள்ளும் உயர்ந்த நோக்கங்களுக்கு ஈடுகொடுக்குமாறு அமையவில்லை.

ஜெயகாந்தனின் சிறந்த சிறுகதைகளை மற்ற பத்திரிகைகளில் தான் படிக்க வேண்டும் போலிருக்கிறது.

144