பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா


க.நா.சு வின் கருத்துக்களுக்கு பதிலளித்து 'எழுத்து' கதைகள் என்ற தலைப்பில் ஒரு தனிக்கட்டுரையே எழுதி இருக்கிறார் செல்லப்பா.

எழுத்து முதல் இதழில் க.நா.சு எழுதிய ‘சிறந்த தமிழ் சிறுகதைகள்' என்று கட்டுரைக்கு இரண்டாவது இதழில் சாமிநாத ஆத்ரேயன் மறுப்பு வெளியிட்டிருந்தார். நான்காவது இதழில் 'அரங்கம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கடிதங்களில் முதலிடம் பெற்றிருக்கிற கஸ்தூரியின் கடிதம். ஆத்ரேயன் கூற்றுக்களை மறுத்து க.நா.சுவின் விமர்சனப் பணிக்கு புகழாரம் சூட்டுவதாக அமைந்திருக்கிறது. “...எப்படியும் தமிழ்நாட்டில் நெஞ்சும் நெஞ்சும் மோதும் ஒரு பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிட்ட க.நா. சுவின் பணி" காலப் பணியையும் மீறித் துளிர்க்கும் பணி என்று பாராட்டி இருக்கிறார் அவர்.

கஸ்தூரியின்கடிதத்தை அடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ள கடலூர் டி. எஸ். கோதண்டராமனின் கடிதம் க.நா.சு வை நோக்கி வினாக்கணைகள் தொடுக்கும் கடிதமாக அமைந்திருக்கிறது.

‘கதை, சிறுகதை நாவல், கவிதை முதலியவைகளை ஸ்ரீ.க.நா.சு அவர்கள் தனிவிதமாக அளவிடுகிறார். ஆனால் அவர் உபயோகிக்கும் அளவுகோல் எது என்பது புரியவில்லை. ஏன், அவரே அதைத் திட்டமாக சொல்ல முடியுமா என்பதும் சந்தேகம்தான்! அவருடைய அளவுகோல் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றை மட்டும் - இந்த 'ஒன்று' மிக முக்கியமானது - அவர் மறந்து விடுகிறார். பொது ஜனப் பேராதரவு! ‘வாசகர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைகள் எழுதுபவர்கள் என்று பலரை ஒதுக்கி வைக்கிறார். ‘பத்திரிக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள்' என்று சிலரைத் தனியே நிறுத்தி வைக்கிறார்.

ஸ்ரீ.க.நா.சு ஒரு கேள்விக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். ‘ஐயா எழுத்தாளர்கள் வாசகர்களுக்காகவும் பத்திரிகைகளுக்காகவும் எழுதாவிட்டால் வேறு யாருக்காக, எதற்காக எழுதுகிறார்கள்? எழுத்தாளனும் மனிதன்தான். தன்னை மறந்து ஒரு ஆவேச நிலையிலிருந்து அவன் எழுதினாலும் மற்ற மனிதர்களை அவன் சிருஷ்டிகள் வசப்படுத்தத்தான் செய்யும். அப்படி

148