பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நோக்கத்துடன்தான் செயல்பட்டு வந்தது என்பதை இத்தலையங்கம் உறுதி செய்வதாக இருக்கிறது.

எனினும் 14ஆவது இதழில் செல்லப்பா புதுக்கவிதையின் இடம் பற்றி எழுதினார். அதன் பிறகு எழுத்து கொஞ்சம் கொஞ்சமாகவும் பின்னர் மளமளவென்றும் புதுக்கவிதை வளர்ச்சிக்கான ஏடாக உருமாறிவிட்டது.

புதுக்கவிதைக்கான இயக்கமாகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கு முன்பு - விமர்சனக்கலைக்கான ஏடாக வெளிவந்து கொண்டிருந்த எழுத்து இதழ்களை மட்டும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் தமிழில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு மட்டுமல்ல, விமர்சனக்கலை வளர்ச்சிக்கும் செல்லப்பாதான் முன் கைடுத்து வைத்து முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதை அதுவே நிரூபிக்கும். செல்லப்பாவுக்கு முன்பும் தமிழில் விமர்சகர்கள் இருந்திருக்கலாம். ஆனால் செல்லப்பா மாதிரி விமர்சனக் கலையை வளர்ப்பதற்கென்றே ஒரு தனி ஏடு தொடங்கி நடத்தியவர்கள் யாரும் இல்லை. செல்லப்பா தமது எழுத்து ஏட்டைத் தொடங்குவதற்கு முன்பும் பலர் புதுக்கவிதைகளை எழுதியிருப்பார்கள். ஆனால் புதுக்கவிதை வளர்ச்சிக்கெனவே ஒரு பத்திரிகையின் பெரும்பாலான பக்கங்களை அர்ப்பணித்தவர்கள் செல்லப்பாவுக்கு முன்பு யாரும் இருந்ததில்லை.

விமர்சனம் - புதுக்கவிதை ஆகிய இரண்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒரு மாத இதழை நடத்த முடியும் என்று சாதித்துக் காட்டினார் செல்லப்பா, எழுத்து ஏட்டில் பல சோதனை முயற்சிகளைத் துணிந்து அவர் செய்தார் என்பதோடு எழுத்து என்ற பத்திரிகையையே அவர் சோதனை முயற்சியாகத் தான் நடத்திக்காட்டினார் வெற்றிகரமாக!

இலக்கியத்தில் சோதனை முயற்சி என்றால் என்ன?

இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதிலளிப்பவர்போல ஆறாவது இதழில் க.நா.சு வின் சிறுகட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் செல்லப்பா.

இலக்கியத்தில் சோதனை என்ற தலைப்பில் க.நா.சு எழுதிய கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே ஏறத்தாழ எழுத்து ஏட்டில் பிரதிபலித்துக் காட்டினார் செல்லப்பா.

161