பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


தன் நாற்பத்தி இரண்டாவது வயதில் (1906 - 48) காலமான புதுமைப்பித்தன், விஷயம், வடிவம், நடை ஆகிய மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான சோதனைகள் செய்து அவைகளில் சாதனை காட்டியவர். அவரது சுமார் நூறு கதைகளையும், கவிதைகளையும், நாடகங்களையும், ஒரு குறுநாவலையும் படிப்பவர்கள் அவைகளைப் படிக்கும்போதே இதை உணரமுடியும்.

அவரது கதைக்கான விஷயங்கள்.உலகில் வாழ வந்த மனிதனது அவலம் மிகுந்த இன்றைய, வாழ்வு விவரணங்கள், சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு, இல்லாமை, ஒரு யந்திர வாழ்க்கை இத்யாதிகளை அடிப்படையாகக்கொண்டு மனித வாழ்வைப் பல கோணங்களிலிருந்து பார்த்த தகவல்கள். சுந்தர ராஜன் செப்பியிருப்பது போல 'அந்த நூறும் நூறு வகையான கதைகள்; அவைகளில் நூற்றுக்குக் குறையாத கோணங்களையும் வேற்றுமைகளையும் நாம் காண்கிறோம், என்றாலும் புதுமைப்பித்தனது ஒரே 'பேசும்குரல்' அத்தனையிலும் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

வடிவம் சம்பந்தமாக புதுமைப்பித்தன் சிறுகதைத் துறையில் கையாண்ட உத்திகள் பலதரப்பட்டவை. அவைகளைஒரு குறிப்பிட்ட வகை, முறைக்குள் அடைக்க முடியாது. அவர் எடுத்துக்கொண்ட விஷயத்துக்கும் அவரது மனஅவசத்துக்கும் என்னதேவை இருந்ததோ அந்தத் தேவைக்கு ஏற்ப நிறைவும் குறைவும் கொண்டு உருவானவைகள். அவரது சிறுகதை உருவ - விஷய சோதனையின் வெற்றிச்சிகரம் ‘கயிற்றரவு' சிறுகதை.

அடுத்து நடை. புதுமைப்பித்தன் நடை தமிழுக்கே புதிது. புரட்சிகரமானது. (தான் கையாண்ட நடையைப் பற்றி அவர் கூறியிருப்பதை பிறிதொரு இடத்தில் காணலாம்) தான் செய்த சோதனையை அவர் தெரிந்தேதான் செய்திருக்கிறார். தன் உரைநடையில் தன் கருத்துக்களை வெளியிட்டுச் சொல்ல நடையை அவர் தனக்கு ஏற்றவாறெல்லாம் அதை முறுக்கியும் திருகியும் லாகவப்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக (அன்று குழம்பினாலும்) இன்று, தான் சொல்ல விரும்பிய கருத்துக்களை விரும்பிய விதமே வார்த்தைக்குள் அடக்கி பிறரிடம் தொற்றவைக்கும்

166