பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


எழுத்து ஏடு மூலம் செல்லப்பா என்ன சாதித்தார் என்று தெரிந்துகொண்டு பிரமிப்பது போலவே - அந்த ஏட்டைத் தொய்வில்லாமல் தொடர்ந்து பத்தாண்டுகள் நடத்த செல்லப்பா எப்படி எப்படியெல்லாம் சிரமப்பட்டார், செயல்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்வது அந்த பிரமிப்பை அதிகபடுத்துவதாகவே இருக்கும்.

32பக்கங்களே கொண்ட 'எழுத்து' ஏட்டின்முதல் ஏட்டிலேயே எழுத்து வளர வாசகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று 20ஆம் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதிலே இந்த “எழுத்து ஏடு உங்களுக்குத் திருப்தி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த இலக்கிய வாசகர்களுக்கு சிபாரிசு செய்யுங்கள்; அவர்கள் முகவரியை எனக்கு எழுதி அனுப்புங்கள். அவர்களுக்கு எழுதுகிறேன், இது பெரிய ஒத்தாசை." என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு இதழிலும் தலையங்கம் போல இலக்கிய கொள்கைகள், இலக்கிய வளர்ச்சி பற்றிய கருத்துக்களை இடைவிடாமல் எழுதுவது போலவே எழுத்து நடத்துவதில் தமக்கு ஏற்பட்ட சந்தோஷங்கள், சங்கடங்கள், ஆகியவைகளையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.அவர் தம்மை இந்தப் பணியில் உற்சாகப்படுத்த வாசகர்களின் ஒத்துழைப்பைக் கோருவதுபோலவே - வாசகர்களை - சந்தாதாரர்களை சந்தோஷப்படுத்தவும் புத்தக அன்பளிப்பு போன்றவற்றின் மூலம் முயன்றிருக்கிறார் அவர்.

வாசகர்களின் ஒவ்வொரு கடிதத்தையும் செல்லப்பா ஊன்றிப் படித்திருக்கிறார். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களில் தம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளை எழுத்து இதழ்களில் அமல் நடத்திக் காட்டி இருக்கிறார் என்பதை எழுத்து முதல் இதழிலிருந்து கடைசி இதழ் வரை காணமுடிகிறது.

இரண்டாவது இதழின் ஆசிரிய உரைப்பகுதியில் 'எழுத்து’ ஏட்டின் ஆத்மா சுத்தமானது 'குழந்தையின் நிர்வாணம் போன்ற புனிதமான தோற்றம் கொண்டிருக்கிறது' என்னும் இரண்டு வாசகக் கருத்துக்கள் என்மனதில் பதிந்தவை - என்று குறிப்பிட்டிருக்கிறார். சந்தா கட்டமுந்தியவர்களின் பெயர்களை மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.

170