உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.

வத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.

‘வாடிவாசல்' என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.

இப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன்லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில் வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

11