பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

பக்கங்களும் 42 என்பதாகக் கூடிவிட்டதோடு - விலையும் மும்மடங்காக ஒண்ணரை ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்த மாற்றங்கள் பற்றி வாசகர்களுக்கு 'திருப்பம்’ என்ற தலைப்பிட்டு எழுதிய தலையங்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் செல்லப்பா.

அதிலும் கூட செல்லப்பாவின் நேர்மையும் - உண்மைகளை ஒளிவு மறைவற்ற வகையில் - சுற்றி வளைக்காமல் பளிச்சென்று பட்டுக்கத்தரித்தது போல - தயக்கமின்றி வெளியிடும் அவரது சுபாவமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.

“இந்த ஏட்டிலிருந்து 'எழுத்து' கால் ஆண்டு ஏடாக குவார்டர்லியாக உங்கள் கைக்கு வருகிறது.

சென்ற ஏட்டிலேயே இதைத் தெரிவிக்க இயலாமல் போனதுக்கு சந்தாதாரர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற ஒன்பதே கால் ஆண்டுகளாக 11 ஏடுகள் மாதம்தோறும் வந்து கொண்டிருக்கும் 'எழுத்து'க்கு இந்த மாறுதல் ஏன் என்பதை நான் விளக்கவேண்டியவன்.

இலக்கியப்பத்திரிகை சம்பந்தமாக மதிப்பிட எனக்குத் தெரிந்திருந்தால் அப்போதே நான் குவார்டர்லியாகவேதான் ஆரம்பித்திருப்பேன்.

'எழுத்து'மாதிரி நோக்கம் உள்ள பத்திரிகைகளுக்கு அதுதான் சரியானது என்பது உலகத்து மொழி இலக்கிய பத்திரிகை உலகத்தைப் பார்த்ததிலிருந்து தெரிகிறது.

இலக்கியக் கருத்துக்கள் சுடச்சுடத் தரவேண்டியவைகள் இல்லை. நின்று நிதானித்து அசைபோடும் போக்காக ஆராய்ந்து மதிப்பீடு செய்ய அவகாசம் வேண்டும். படைப்புகள்தான் சுடச்சுடத்தரப் பட வேண்டியவை உடனிகழ் இக்காலத்திலேயே அவைகளுக்கு உறவு ஏற்பட்டாக வேண்டும்.

நிதானமான, ஆராய்வான செயல்படுகைக்கு காலாண்டு ஏடு வசதியாக பொறுத்தமாக இருக்கும் என்றுபடுகிறது. ஆனாலும் குவார்டர்லியிலும் சில சங்கடங்கள் இருக்கின்றன. சில தகவல்களைச் சொல்லும்போது ரொம்ப நாளாகிவிடும். பழசாயும் போயிருக்கலாம்.

177