பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

முயலலாம். இந்த ஏடுபற்றி விளக்குவதை விட இது உங்களிடம் தன் புது தொனியைக் காட்டுகிறதா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

'எழுத்து'ஆக்க ரீதியாக மதிப்பீட்டில் ஈடுபடுமே தவிர தெருச்சண்டைக்காரர்களுக்கு குளிர்ச்சி என்றபடி-சத்தான விவகாரம் இல்லாத பட்டிமன்ற சர்ச்சைகளை விரும்பாது. புதுக்கவிதை சோதனை முயற்சிகள் சம்பந்தமாக இயங்க அக்கறை கொண்டதால் அதில் சாதனைகாட்டியவர்களை அடிக்கடி பிரஸ்தாபித்து ஆராய்ந்து படைப்புக்கு ஊக்கம் அளிக்கச் செய்வது அவசியமானதே. இனி படைப்புகள் மதிப்புரைகள் கணிசமாக இடம் பெறும்; நான் திட்டமிடலாம் நல்ல சிறுகதைகளும் மதிப்புரைகளும் கட்டுரைகளும் கிடைக்க வேண்டுமே; பார்ப்போம்."

- என்று குறிப்பிட்டிருக்கிறார் செல்லப்பா.

தலையங்கத்தின் இறுதியில் சந்தாதாரர்கள் மூலமே பத்திரிகை நடத்துவது என்கிற தமது முதல் இதழ்ப் பிரதிக்ஞையின் அடிப்படையில் இந்தப் பத்தாவது ஆண்டிலும் சந்தாதாரர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறார்.

“எழுத்துவின் பொருளாதார நிலை பற்றியும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். தன்னைத்தானே பார்த்துக்கொள்ளக்கூட முடியவில்லை. கையைக் கடித்தது.

சந்தா மெலிவால் 'எழுத்து'ம் ஈசலிறகு போல் வந்தது. சென்ற ஆண்டு தடுமாறியும் வந்தது; உங்களுக்குத் தெரியும். இப்போது புதுப்பித்த முயற்சியில் 'எழுத்து' இறங்கி இருக்கிறது. தடுமாறாமல் வர சந்தா முக்கியம்.

இந்த 'எழுத்து'உங்களுக்கு நல்ல திருப்பம் காட்டுவதாகப் பட்டால் ஆளுக்குக் குறைந்தது ஐந்து சந்தாதாரர்களை அறிமுகப்படுத்தும்படிக்கேட்டுக் கொள்கிறேன். இந்த ஏடு பற்றி உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்"என்று முடித்திருக்கிறார் செல்லப்பா.

செல்லப்பாவின் சந்தா சேகரிப்பிற்கான வேண்டுகோளுக்கு பலன் இருந்ததா? இல்லை என்றே தோன்றுகிறது.

180