பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


புதுக்கவிதை சம்பந்தமாக ஒரு வார்த்தை இந்தப் பத்தாண்டுக் காலத்தில் வளம் பெருகி, மற்றப் பத்திரிகைகள் சிலவும் அதை வரவேற்றுப் பிரசுரிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட 'எழுத்து’ சாதித்திருக்கிறது. சிறந்த கவிதைகள் பல தமிழில் பிறந்திருப்பது தமிழ் கவிதைக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருப்பதற்கு அறிகுறியாகும்.

கடைசியாக-வெளிநாடுகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய ஏடுபோல எழுத்து ஆக வேண்டும் என்பதே இலட்சியம். வரும் ஆண்டில் அதுக்கான செயல்முறையை கையாள உத்தேசம் வாசகர்கள் தங்கள் சந்தா ஆதரவை தொடர்ந்து தருவதுடன் அதிகப்படுத்தியும் தரும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

- என்று எழுதியிருக்கிறார் செல்லப்பா.

ஆரம்ப ஏடு முதல் கடைசி ஏடுவரை செல்லப்பா எத்தனை எத்தனையோ முறை" சந்தா அனுப்புங்கள். சந்தா சேர்த்துக்கொடுங்கள்" என்று வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோளாக விடுத்திருந்தும் அவர் எதிர்பார்த்தபடி சந்தாதாரர்கள் சேராததால் 'எழுத்து' அவரே வர்ணித்திருப்பதுபோல் புற்றீசலின் சிறகாகப் பக்கங்களால் மெலிந்து ஒரு கட்டத்தில் காலாண்டிதழாக மாறி கடைசியில் நின்றே போய்விட்டது.

செல்லப்பாவையும் செல்லப்பாவின் எழுத்து ஏட்டின் இலக்கிய வளர்ச்சிக்கான பணிகளையும் நினைவு வைத்திருப்பவர்களும் இன்றும் செல்லப்பா நடத்திய எழுத்து ஏட்டின் தொகுப்புகளைத் தேடி படிப்பவர்களும், இப்போது செல்லப்பா போலவே-உயர்ந்த நோக்கங்களோடு வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்களுக்கேனும் சந்தா செலுத்த வேண்டும்; சந்தா சேர்த்துத் தர வேண்டும். அதுவே செல்லப்பாவுக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

186