பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


"அரசியலில் நிரந்தர எதிரிகள் என்றும் யாரும் கிடையாது, நிரந்தர நண்பர்கள் என்பதாகவும் யாரும் கிடையாது" என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதைப் பார்த்திருக்கிறோம்.

இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்றுதான்தோன்றுகிறது. ‘பாரதியார் உலக மகாகவி’ என்று வ.ரா. சொல்ல-"அப்படிச் சொல்வது சரியல்ல" என்று கல்கி எழுத - அது ஒரு பெரிய சர்ச்சையாகி-அதையே ஒரு சிறு புத்தகமாக வெளியிடும் அளவுக்குப் போய்விட்டது! ஆனால் வ.ரா. வோடு வாதிட்ட கல்கிதான் எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப முன்வந்தார்.

அது போலவே இலக்கிய விமர்சன உலகில் க.நா.சு வும், சி.சு.செல்லப்பாவும் நேர் எதிர் துருவங்களாக மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்ததும் உண்டு. இரண்டு பேருமே சேர்ந்து ‘எழுத்து' மூலம் விமர்சனக்கலை வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்ததும் உண்டு அதன்பிறகு மறுபடியும் மனவேறுபாடு கொண்டதும் உண்டு!

'எழுத்து' என்ற பெயரில் விமர்சனக்கலை வளர்ச்சிக்கு என ஒரு ஏடு வேண்டும் என்ற எண்ணம் செல்லப்பாவுக்கு எப்படி உண்டாயிற்று? சிறுகதைகள் எழுதுவதில் மட்டும் அக்கறை கொண்டிருந்த செல்லப்பாவை விமர்சனத் துறைக்குள் தள்ளிவிட்டவர்கள் யார்?

செல்லப்பாவே அதுபற்றி என்சிறுகதைப்பாணி என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

“மைலாப்பூரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டத்தில் லா.ச.ராமாமிருதம் கதைகளை அவரை வைத்துக் கொண்டே ஆராய்ந்து கூட்டத்துக்கு என்னை தலைமை வகிக்கச் சொன்னார்கள். அதுதான் முதல் கூட்டம். அதுக்கு பிறகு என்னையே ஒரு கூட்டத்தில் சிறுகதை பற்றி பேசச் சொன்னார்கள். இப்படி என் ரசனை வெளியீட்டு அனுபவம் ஆரம்பம். அப்போது தி.ஜானகிராமன்

187