பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

கிடந்த பல்வேறுபட்டவர்களையும் விமர்சனத் துறைக்குள் பிடித்துத்தள்ளியது.

க.நா.சு. செல்லப்பா எழுதிய கட்டுரைகளை விட அந்த தீபாவளி மலரில் ராபூர் தேசிகன் எழுதிய கட்டுரை தமிழின் மீது ஆறாக் காதல் கொண்டவர்கள் எல்லோரையுமே விமர்சகர்கள் ஆக்கிவிட்டது. (இதனை எழுதும் நானும் கூட அன்று அந்தக் கட்டுரைகளைக் குறிப்பாக ரா.ஸ்ரீ. தேசிகன் கட்டுரைகளை கடுமையாகத் தாக்கி கூட்டங்களில் பேசி இருக்கிறேன். தோழர் விஜயபாஸ்கரனின் 'சரஸ்வதி’க்கு இந்த மூன்று கட்டுரைகளை விமர்சித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றினை அனுப்பி வைத்தேன். அதில் ஒரு பகுதி மட்டும் வாசகர் கடிதப்பகுதியில் வெளிவந்தது.)

அதுநாள் வரையில் படைப்புகளில் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட பல்வேறு போக்குகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் பலரும் திடீரென்று விமர்சனத்துறையிலும் இறங்க அந்த சுதேசமித்திரன் தீபாவளிமலர் தமிழில் அதுவரை கவனத்திற்கு வராமல் இருந்த விமர்சனத்துறைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை மட்டுமல்ல, வேகத்தையும் தந்துவிட்டது. அது கிளப்பிய சர்ச்சைகளே செல்லப்பாவையும் விமர்சனத் துறைக்குள் தள்ளியது. அதனாலேயே தமிழில் விமர்சனத்துறைக்கு என்றே ஒரு தனி ஏடு எழுத்து செல்லப்பாமூலம் முதன்முறையாகக் கிடைத்தது.

சுதேசமித்திரன் தீபாவளிமலர் கட்டுரை மூலம் ஒன்றுபட்ட க.நா.சுவும் செல்லப்பாவும் எழுத்து ஏட்டின் ஆரம்பக் காலத்திலும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு விமர்சனக் கலையின் வளர்ச்சி என்பதில் தோளோடுதோள் நின்று செயல்பட்டார்கள்.

பின்னர் இன்னொரு காலகட்டத்தில் எழுத்துவையும் செல்லப்பாவையும் கடுமையாகத் தாக்கியவர்களோடு க.நா.சுவும் சேர்ந்து கொண்டார்.

அதுபோலத்தான் செல்லப்பாவை குறை கூறியவர்களுக்கு ஆதாரமாக பி.எஸ். ராமையாவும் செல்லப்பாவை வெளுவெளு என்று வெளுத்துக்கட்டி ஒரு கடிதம் தந்தார். என்றாலும் செல்லப்பா இதையெல்லாம் மனதில் போட்டுக் கொள்ளவில்லை.

189