பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


“பி.எஸ்.ராமையாமணிக்கொடி ஆசிரியராக இருந்தவரே தவிர மணிக்கொடி ஏட்டின் தரத்திற்கு சிறந்த கதைகள் எழுதியவரல்ல" என்று ஒரு பிரச்சாரம் ராமையாவுக்கு எதிராக எழுந்தபோது ராமையாவைத் தேடிப்போய் அவரது சிறுகதைகள் அனைத்தையும் அவரிடமிருந்து வாங்கிவந்து ராமையாவின் சிறுகதை பாணி என்ற தலைப்பில் 300 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டார் செல்லப்பா!

இவைகள் எல்லாம் அந்தக்காலத்து எழுத்தாளர்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் விமர்சன மோதல்கள் கடுமையாக இன்று போலவே இருந்தது என்றாலும் அவர்கள் எல்லாம் தனி மனிதத் துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு மோதிக்கொள்ளவில்லை! படைப்புகள் பற்றிய விமர்சனமே அவர்களது மோதல்களில் வியாபித் திருந்தது. அதனால்தான் அவர்களால் "இலக்கிய விமர்சனத்தில் நிரந்தரநண்பர்களும் இல்லை. நிரந்தரவிரோதிகளும் இல்லை" என்பது போல பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் குறையாத வகையில் நடந்து கொள்ள முடிந்தது!

செல்லப்பாவைக் குறை கூறுபவர்கள் எல்லோரும் பொதுவாகக் கூறக்கூடிய புகார்கள் என்ன? அவர் ஒரு முன்கோபக்காரர், முகடு, தன் கருத்துதான் சரி என்று திடமாக நம்புகிறவர். அதனால் மாற்றுக் கருத்துக்களை அவர்மதிக்க மாட்டார் என்று கூறப்படுவதுண்டு!

செல்லப்பா நடத்திய எழுத்து முதல் இதழிலிருந்து கடைசி இதழ் வரையில் படித்துப் பரிசீலிக்கும் எவருக்கும்

“செல்லப்பா தன் கருத்தில் பிடிவாதமாக இருப்பவர் என்பது எவ்வளவு உண்மையோ-அந்த அளவுக்கு பிறர் கருத்துக்கு - தமக்கு உடன்பாடு இல்லாத மாற்றுக் கருத்துக்களுக்கு அவர் தாராளமாக இடம் தந்தார்" என்பது தெளிவாகப் புரியும்.

மாற்றுக் கருத்துக்கொண்ட கட்டுரைகளை அல்லது கண்டனக் கடிதங்களை அவர் 'எழுத்து'வில் பிரசுரித்தார் என்பதோடன்றி அவற்றிற்கான பதில்களையும் பொறுப்புணர்வோடு எழுத்து தலையங்கப் பகுதியிலோ அல்லது கட்டுரை வடிவிலோ சொல்லி தம்மிடம் கருத்துவேறுபாடு கொண்டவர்களை சமாதானப்படுத்தவும் அவர் முயன்றிருப்பதைப் பல இதழ்களில் காணமுடிகிறது.

190