பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



முடிவில் உங்கள் வழக்கமான சேஷ்டையைக் காண்பித்து விட்டீர்களே!"

'அபூர்வ ராகம்' எனக்கு எழுத்துத்துறையில் ஒரு திருப்பம். வாசகர்களும் சக எழுத்தாளர்களும் ‘இதென்ன புதுக்குரல் கேட்கிறது?' என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

அதற்குப் பின்னாலும் என் கதைகள் வெளி வந்து கொண்டிருந்தன. செல்லப்பாஎன்ன அபிப்பிராயம் சொல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஜனனி, யோகம், புற்று, ப்ரளயம்... ஊஹூம் செல்லப்பாவாய் திறக்கவில்லை. நானும் கேட்க வில்லை.

எனக்கு மட்டும் ரோசமில்லயா? அவர் வரையில் என்னிடம் ஏதோ அத்தி பூத்து உதிர்ந்து விட்டது என்று என்னைப் பற்றி நினைத்துக்கொண்டேன். என்னில் ஏதோ விசனம் கண்டேன்.

காலம் கடந்தது.

ஒரு நாள்மாலை பெரிய தெருவில் (நாங்கள் திருவல்லிக்கேணி வாசிகள்) ஏதோ குருட்டு யோசனையில் எதிரே யார் என்ன வருகிறது என்று கூடத் தெரியாமல் -

“என்னய்யா இது இந்த மாதிரி தெருவில் நடந்தால் ஆபத்து இல்லையா?”

அதட்டல் கேட்டு உலகுக்கு மீண்டால் என் வழியில் செல்லப்பா நின்று கொண்டிருந்தார் கையில் அவர் பையுடன், முகத்தில் சிரிப்பு இல்லை. தெருவில் என் அஜாக்ரதைக்குக் கோபம் தானிருக்கும்.

ஒரு நிமிஷம் பொறுத்து,

"சுதேசமித்திரன் வார இதழில் உங்கள் கதை - இதழ்கள் (பார்கவி) படித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு அப்பு அழுக்குக் கிடையாது. Perfect Ending ல் வைத்திருக்கும் முத்தாய்ப்பு பிரமாதம்" என்றார்.

193