பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


எழுதிய கட்டுரைகள். அதுவரை ஏழு விமர்சன கட்டுரைகள் எழுதி இருந்தேன்.

இந்த ஏழு கட்டுரைகளை நான் எழுதியபோது விமர்சனம் எழுதும் ஈடுபாடு ஏற்பட்டதே தவிர, விமர்சனத்துக்காக ஒருபத்திரிகை என்ற நினைப்பே அறவே இல்லை. ஆனால் ஐம்பத்தாறில் நடந்த தேக்கம் - வளப்பம் - விவகாரம் (சுதேசமித்திரன்) எனக்குள் ஏற்படுத்திய வேகம் வளர்ந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் அதுக்கு ஏற்ப எழுதிய இந்த ஏழு கட்டுரைகளும் சத்தாக இருப்பதாக உணர்ந்தேன். எனக்குள் ஒரு திட நிச்சயம் ஏற்பட்டது. அதாவது விமர்சனத்துறையில் நிறைய சொல்ல விஷயங்கள் இருப்பதாக உணர்வு ஏற்பட்டது. விமர்சனக் கட்டுரைகள் போட எந்த பத்திரிகையும் தயாராக இல்லை. தீபாவளி மலர்களில் ஒன்றிரு கட்டுரைகள் "பெரிய மனிதர்கள்” என்று அவர்கள் கருதும் சிலரது பத்தாம் பசலி விஷயங்கள் கொண்ட கட்டுரைகளையே போடுவார்கள். எனவே என் கட்டுரைகளுக்கு இடம் கிடைக்காது என்று நிச்சயமாக தெரிந்தது. அந்த நினைப்பு விழுந்ததும் தான் பத்திரிகை யோசனை தோன்றியது. ராமையா ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் ‘சிறுகதைகளை மட்டும் போடுவதற்காக ஒரு பத்திரிகை இல்லை' என்று குறிப்பிட்டு சிறுகதை மணிக்கொடி ஆரம்பித்தது போலவே அவர் ஊர்க்காரரான எனக்கும் தோன்றவே 'விமர்சனத்துக்காக மட்டும் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?’ என்று எனக்குள் கேட்டுக் கொண்டு, 'அவசியம் தேவை' என்று நானே பதிலும் சொல்லிக் கொண்டேன். 'எழுத்து’ மனதில் கருக் கொண்டது. துணிந்து என் சொந்த முயற்சியாக 'எழுத்து’ - புதுமை இலக்கிய மாத ஏடு என்ற பொதுப் பெயரில் 1959 ஜனவரியில் முதல் ஏட்டை கொண்டுவந்தேன். என் இலக்கியப்பாதை இலக்கியப் பத்திரிகைப் பாதையாக புதிய திருப்பம் கொண்டது. விமர்சனம்தான் உத்தேசம் என்றாலும் புதுவித படைப்புகளை ஒதுக்கி விடக்கூடாது என்ற விவேகமும் இருந்தது. முதல் ஏட்டுக்கு பெரும் பகுதிக்கட்டுரைகளுடன்கதை, கவிதைகளும் போட்டேன்.

ஐம்பத்தொன்பது முதல் என் இலக்கியப் பாதை விமர்சனத்துறையில் தான் இன்றுவரை (தொண்ணுற்று ஐந்து வரை எனக்கு வழிஅமைத்து சென்றிருக்கிறது. எழுத்து விமர்சனத்துக்காகத்தான் ஆரம்பித்தேன். ஆனால் புதுக்கவிதை

196