பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து-சி.சு.செல்லப்பா

பசுவய்யா,தி.சோ. வேணுகோபாலன், சி.மணி, நகுலன், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்கள் வெளிப்பட்டனர். செல்லப்பாவும் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளோடு புதுக்கவிதைகளும் எழுதினார்.

விமர்சனத் துறையில் வெங்கட்சாமிநாதன், தர்மு சிவராமு என்ற புதுக்குரல்கள் 'எழுத்து' மூலம் உரத்து ஒலித்தன. ந.முத்துச்சாமி சிறந்த சிறுகதையாளராக எழுத்து மூலம் வெளிப்பட்டார்.

11 ஆண்டுகள் லட்சிய முனைப்போடும் பிடிவாதத் தோடும் இதழை நடத்திய சி.சு. செல்லப்பாவுக்கு அதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு கட்டுக்கு அடங்காதது. அர்ப்பண உணர்வும் லட்சியப் பிடிப்புமே அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க வைத்திருக்கிறது.

‘என் வாழ்க்கைப் பாதையில் முன்பாதியில் தேசத்துக்காக; பின்பாதியில் இலக்கியத்துக்காக என்று இதைச் சாதாரணமாக இவரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

என்கிறார் சி.மோகன்.

இந்த இடத்தில் ஒரு தகவல்!

பெரியவர்வல்லிக்கண்ணன் அவர்கள் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு எழுத்து முதல் இதழ் முதல் 119ஆவது இதழ் வரையிலான 10 தொகுதிகளை என்னிடம் கொடுத்து இவைகளைப் படித்து ‘எழுத்து'வின் பணிகள் சாதனைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்றார்.

ஒவ்வொரு தொகுப்பாக எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு தொகுப்பு பற்றியுமே தனித்தனியாக புத்தகங்கள் எழுதலாம் என்று தோன்றுகிற அளவுக்கு படிக்கப்படிக்க தனிமனிதனாக நின்று இவ்வளவு பெரிய சாதனைகளைச் செல்லப்பாவால் எப்படி சாதிக்க முடிந்தது என்ற பிரமிப்பே மேலோங்கியது.

முதல் 12 இதழ்களில் 8 இதழ்கள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே இவ்வளவு நீளமான கட்டுரையாகி விட்டது. எழுத்துவின் முதல் வருடம் முழுவதும் அது இலக்கிய விமர்சனத்திற்கான பத்திரிகையாகவே வெளி வந்திருக்கிறது.

200