பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

பிரசுரம்' ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

அவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும் நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் 'எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.

பின்னர், ‘தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் 'எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.

அதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

‘அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது' என்று செல்லப்பா சொன்னார்.

‘நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம்' என்றேன்.

'அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்’ என்று அவர் தெரிவித்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா என்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். 'இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.

‘இதுவே போதும்' என்று சொன்னேன்.

'அது நியாயமில்லை' என்று கூறிச் சென்றார்.

அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதை இவரிடம் கொடு’ என்றார்.

அம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.

14