பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


கவிதையின்சரித்திரத்தைப் பார்த்தால், பாட்டிலிருந்தே கவிதை பிறந்திருக்கிறதென்று தோன்றுகிறது. முதல் முதலாக மனிதன் பாடத்தான் பாடியிருப்பான். இத்துறையில் அவனுடைய ஆதிகுருமார்கள் என்று குயிலையும் மாட்டையும் கரிச்சானையும், நீரொலியையும் இடியையும் இவை போன்ற எண்ணற்றவையேயும் தான் கொள்ள வேண்டும். எனவே பாடினான் என்பதைவிட இசைத்தான் என்றே கூறலாம். ஒருக்கால் வாயால் இசைக்கும் முன்னரே இசைக்கருவிகளைக் கண்டுபிடித்திருக்கவும் கூடும். வண்டடித்த மூங்கிலில் எழும் ஒலியைக் கொண்டே புல்லாங்குழல் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இசைக் கருவிகளைக் கொண்டு இசையறிவு விரிந்திருக்கக்கூடும். நாதசுரத்தில் சாகித்யத்தைப் பழக தத்தகாரங்களே போதுமானவை என்று சொல்லப்படுவதையும் இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம். வார்த்தைகளை உருவி விட்ட மெட்டைத் தானே வாத்யத்தில் கேட்கிறோம். முதல் முதலாக சொல்லுக்கு அதிக இடமற்ற இசையே பாட்டாக உலவிற்று என்று கருதலாம்.

மனிதனுடைய சிந்தனையும் உணர்ச்சியும் வளர்ச்சி அடையத் தலைப்பட்ட பிறகு வெறும் இசையால் உண்டாகும் இன்பத்துடன் பொருளையும் மன நெகிழ்ச்சியையும் வியப்பையும் துயரத்தையும் சொற்களின் மூலம் ஊட்டி இசைக்கு நிரந்தரமான அடிப்படையையே அளிக்கலாமே என்ற ரகசியம் மனிதனுக்குப் புலனாகிவிட்டது.

சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒயுமொலி சொல்லொணாத ஏக்கத்தை உண்டாக்குகிறது என்பதுநம்முடைய அனுபவம். ஆனால் மனிதன் உயிரின் பெருவெள்ளத்திலிருந்து பிரிந்த தனித்துளி மூலத் தொடர்பறுந்து வாழ்வெனும் துயரக்கடலில் விழுந்துதத்தளிப்பதாகக் கருதி தவிக்கும் ஜீவன். இந்தப் பிரிவினை துயரத்திற்கு வேதனைப்படுவது போன்ற வேதனைதரும் சொற்களையும் இவ்வேகத்துடன் கோர்த்து விட்டால் இசை கவிதையாகி விடுகிறது. காற்றில் தோன்றி காற்றில் மறையும் இசை கால்பெற்று நிலைத்து உணர்ச்சிக்குத் தீயூட்டும் சிறப்பை அடைகிறது. இப்பொழுது இசை வெறும் குறிப்பற்ற கிளர்ச்சியாக இல்லாமல் பொருளுள்ள பாட்டாகிறது. கவிதையாகிறது.

ஆனால் ஒன்று. இரண்டு வகையிலும் காதென்னும் பொறி வழியேதான் இந்த இன்பமும் அனுபவமும் தோன்றியாக வேண்டி

213