பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து-சி.சு.செல்லப்பா

உண்டாகி விட்டது. எனவே பல கோடி ஒலி அமைப்புகளிலே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதையில் ஒலி இன்பத்தைக் கூட்டுவதுபோல பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசையவைக்கும் முயற்சி புதிய கவிதை ஆயிற்று, யாப்புக்கிணங்காத வகை என்று குறிப்பிடுவதற்காகவே கவிதை என்ற சொல்லுடன் 'வசன' என்ற சொல்லையும் சேர்த்து இப் புதிய முறையைக் குறிப்பிடுகிறார்கள். பார்த்தால் வசனம் பாய்ந்தால் - நெஞ்சில் பாய்ந்தால் - கவிதை.

மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலி நயம் என்று ஏதோதனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்கக்கூட இடமிருக்கிறது; கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் கவிதையில் தெரிவிக்க ஏறக்குறைய குறிப்பிட்ட வார்த்தைகளால் முடியும். வேறு சொற்களை உபயோகித்தால் கருத்தும் உணர்ச்சியும் மாறிவிடும். கருத்திலோ உணர்விலோ ஏற்படும் இசையே ஒலிதயம் என்ற தனிப்பேருடன் நடமாடுகிறது.

பாம்பைப் பற்றிய மரபான கருத்தொன்றை ஆராய்ந்து பார்ப்பது இந்த வாதத்திற்குத் தெளிவை அளிக்கும். பாம்புக்குக் கட்செவி என்ற பெயர். அதாவது பாம்புக்குக் காதுகிடையாது என்று ஏற்படுகிறது. ஆனால் மகுடிக்கு முன் ஆடுகிறதே என்று சொல்லக்கூடும். பழம் நூல்களெல்லாம் பாம்புக்கு இசை உணர்ச்சி அதிகம் என்று கூறுகின்றனவே என்றும் சொல்லக்கூடும். ஊர்வன வகை ஆராய்ச்சியாளர்கள் பாம்பு இசையைக் கேட்டு ஆடவில்லை, கண்ணுக்குத் தெரியும் மகுடியோ மற்றப் பொருளோ அசைவதற்கு ஏற்ப ஆடுகிறது என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே பாம்பு ஒலிநயம் காண்பதாகக் கூறுவதெல்லாம் ஒரு பிரமை. மரபுக்கிணங்கிய கவிதையின் ஒலிநயம் என்று கூறுவதும் இதைப் போன்ற ஒரு பிரமையே, உண்மையில் மகுடியின் இசையைப்போல் கவிதையில் ஆடும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அனுபவித்துத் தான் கவிதாரசனை. பெறுகிறோமே அல்லாது வேறெதுமில்லை என்றே கூறலாம்.

வசன கவிதையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். அன்று முதல் இப் புதுத்துறையில் முயற்சிகள் நடைபெற்றே வருகின்றன

216