உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நீராடிவிட்டு வந்து, ஏழுமணி சுமாருக்கு பஸ்சில் ஏறி சிந்துபூந்துறை வந்து, அண்ணாச்சி வீட்டிலிருந்து புத்தகங்களை பைகளில் அடுக்கி எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாள் ஒரு கல்லூரி என்று போய் புத்தகங்களை விற்பதில் ஈடுபட்டோம்.

அனைத்துக் கல்லூரிப் பேராசிரியர்களும் 'பிரின்ஸ்பால்களும்' எங்கள் இருவரையும் இலக்கிய வாதிகளாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. சீசன்தோறும் புத்தகங்களைத் தள்ளிவிட வருகிற விற்பனை ஏஜண்டுகள் தான் நாங்களும் என்று சில கல்லூரிகளின் முதல்வர்கள் எண்ணினார்கள். அந்த ரீதியிலேயே பேசினார்கள். ஆயினும் பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள் எங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள். எங்கள் எழுத்துக்களையும் அறிந்திருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தான் நான் 'தீபம்’ மாத இதழில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புதுக்கவிதை நூல்களும் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. ஆகவே, எங்களை அநேக கல்லூரிகளில் புதுக்கவிதை பற்றியும், தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்தும் பேசச்சொன்னார்கள். பல கல்லூரிகளில் 'எழுத்து பிரசுரம்’களை மகிழ்ச்சியுடன் வாங்கினார்கள். சில இடங்களில் வேண்டாம் என மறுத்து விட்டார்கள்.

‘உங்கள் நூல்களை நீங்களே சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வதைப் பார்க்கையில், சுதந்திரப்போராட்ட காலத் தியாகிகளின் நினைவு எங்களுக்கு வருகிறது. மகாத்மா காந்தியின் வழிகாட்டலில், தொண்டர்கள் கதர் துணிகளை கட்டுக் கட்டாகச் சுமந்து கொண்டு ஊர்ஊராகச் சென்று கதர் விற்பனை செய்வதில் உற்சாகமாக ஈடுபட்டார்கள். அதேமாதிரி நீங்களும் நல்ல நூல்களை சுமந்து சென்று விற்கிறீர்கள். உண்மையான காந்தியவாதிகளாகவே நீங்கள் இருவரும் தோன்றுகிறீர்கள். எளிமையாக இருக்கிறீர்கள். பெரிய எழுத்தாளர்கள் என்று பந்தா எதுவும் பண்ணிக்கொள்ளாமல் சாதாரணர்களாகவே காணப்படுகிறீர்கள். உங்களை கவுரவித்து பெருமைப்படுத்த வேண்டும். இப்போது எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. புத்தகங்கள் கூட, வாங்கமுடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்படுகிறோம்.'

17