பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


மார்க்சிய தத்துவத்தினால் பாதிக்கப்பட்டவர்களும்-மார்க்சிய நோக்குடன் வாழ்க்கையையும் சமூகத்தையும் கவனித்து தங்கள் எண்ணங்களை சொல்கிறவர்களும் அவர்களது கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழில் புதுக்கவிதை எழுத முற்பட்டார்கள். அது பிந்திய நிகழ்ச்சி.

இத்தகையோரது கவிதைகள் எழுத்து ஏடுகளில் இடம்பெற்றதில்லை. புதுக்குரல்கள் தொகுப்பில் மார்க்சீயதத்துவ அடிப்படையில் பிறந்தகவிதை எதுவும் இல்லை.

'எழுத்து' ஏடுகளில் கவிதை எழுதியவர்களும், 'புதுக்குரல்கள்' கவிஞர்களும் ஃபிராய்டிசதத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சில விமர்சகர்கள் குறிப்பிட முன் வந்தார்கள். இது தவறான கணிப்பு ஆகும்.

வாழ்க்கையை கவனித்து, வாழ்வும் காலமும் அன்றாட நிகழ்ச்சிகளும் உள்ளத்திலும் உணர்விலும் உண்டாக்கிய அதிர்வுகளை எழுத்தாக்க முயல்கிறவர்கள் அனைவரும் ஃபிராய்டீசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லேபிள் ஒட்டுவது தவறான செயல் தான். அதேபோல் சமூகத்தில் காணப்படுகிற வறுமை, பணத்திமிர், இதர கொடுமைகள் சீர்கேடுகள் முதலியன ஏற்படுத்துகிற உள்ளத்துடிப்புகளை எழுத்தாக்குகிற எல்லோரையும் மார்க்சீய தத்துவப் பாதிப்பு பெற்றவர்கள் - மார்க்சியப் பார்வையோடு பிரச்னைகளை அணுகுகிறவர்கள் என்று முத்திரை குத்தி விடுவதும் தவறான கணிப்பாகவே முடியும்.

ஃபிராய்டிசம், மார்க்சியம் போன்ற தத்துவங்களைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள்கூட, வாழ்க்கையாலும் அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எழுத்துக்களாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதை எடுத்தாலும், அதற்கு அயல்நாட்டுத் தத்துவப் பெயரைச் சூட்டி விட்டால்தான் விமர்சனம் பூர்த்தி பெற்றதாகும் என்ற நினைப்போடு விமர்ச்சிக்க முற்படுகிறவர்கள் தங்கள் அறிவுப் பிரகாசத்தையும் மேதைத் தனத்தையும் வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறார்கள்.

'புதுக்குரல்கள்' தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஐந்து (ந.பி., கு.ப.ரா. கவிதைகள்) எழுத்து காலத்துக்கு முற்பட்டவை. மற்றவை 1959 - 62 க்கு உட்பட்ட நான்கு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை.

248