பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'புதுக்கவிதை'


‘ஏனய்யா இந்த மாதிரிக் கவிதையல்லாத கவிதைகளையெல்லாம் போட்டு எங்கள் பிராணனை வாங்குகிறீர்?' என்று ஒரு நண்பர் புதுக்கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக் கேட்டுள்ளார்.

மணிக்கொடி காலத்தில் சொ.வி.புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில் இதெல்லாம் கதைகளா ஐயா, கழுத்தறுப்பு என்று சொன்னவர்கள் உண்டு.

அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்றால் ஆஹா என்கிறார்கள்.

இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமேயில்லை.

சிறுகதை என்கிற உருவம் போல, புதுக்கவிதை என்கிற உருவம்தோன்றிவிட்டது - நிலைக்க அதிக நாள் பிடிக்காது.

தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் சுலபமான காரியமாகி, எழுதப்பட்ட செய்யுள் எல்லாம் கவிதை என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது.

இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே பொதுவாக உள்ள விஷயம் தான். மரபு என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த அர்த்தத்திலே புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.

கவிதை வழிகள் தடம் தேய்ந்து, தென்றல் காயவும், மதிதகிக்கவும், மலர் துர்க்கந்தம் வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத் தற்காலக் கவிதையைப் படிப்பவர்களில் சிலராவது ஏற்றுக் கொள்வார்கள்.

இந்தக்கவிதை மொழி, வார்த்தைகள்,பொருள்கள், மதி, மலர், தென்றல், ஒளி இத்யாதி எல்லாம் உபயோகத்தால் தேய்ந்து தேய்ந்து உருக்குலைந்து விட்டன.

பழைய சந்தங்கள் போக, புதுச்சந்தங்கள், புது வார்த்தைச் சேர்க்கைகள், புது உவமைகள் இன்றுள்ள நிலைக்கேற்பத் தோன்றியாக வேண்டும்.

267