பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் சிறுகதை 10
சி.சு. செல்லப்பா


சிறுகதைமணிக்கொடி மூன்றாவது ஏட்டில் (28.4.1935) கு.ப. ராஜகோபாலனின் 'சிறுகதை’ என்ற கதை வெளிவந்தாலும் அதுக்கு முன்பே கு.ப.ரா சுதந்திரச்சங்கு வாரப் பதிப்பு பத்திரிகையில் மூன்று கதைகள் எழுதி இருக்கிறார். குடும்ப சுகம் (23.3.1934) நூர் உன்னிஸா (30.3.1934) தாயாரின் திருப்தி (13.3.1934) ஆகியவை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். 1935ல் வெளிவந்த சிறு கதை மணிக்கொடி முதல் ஏட்டில் வெளியான என் கதை 'ஸ்ரஸாவின் பொம்மை' கதையை ஆராயுமுன், அதாவது பிச்சமூர்த்தியின் ‘முள்ளும் ரோஜாவும்' கதையை பார்த்தபோதே, கு.ப.ரா. வையும் பார்த்திருக்க வேண்டும்.

கு.ப.ரா. வை அவரது ‘நூர் உன்னிஸாவை' வைத்துத்தான் பார்க்கவேண்டும். அது 'சுதந்திரச்சங்கு' வில் இரண்டாவதாக வெளிவந்தாலும் அதுதான் முதலில் அவர் எழுதிய கதை. குடும்ப சுகம் பின்னால்தான் எழுதியது என்பது பிச்சமூர்த்தி கொடுத்த தகவல். ஆகவே நூர் உன்னிஸா சிறுகதைக்கு என்ன பங்கு செலுத்தியது என்று பார்ப்போம். குளத்தங்கரை அரசமரம், என்னை மன்னித்து மறந்து விடு, மலரும் மணமும், ஊமச்சி காதல், கேதாரியின் தயாார், முள்ளும் ரோஜாவும், தபால்கார அப்துல் காதர் ஆகிய இதுக்கு முன் நாம் பார்த்த கதைக்குப்பின்வந்த கதை நூர் உன்னிலஸா.

இதுதான்முதல் காதல் கதை என்றுநான்கருதுகிறேன். அதாவது மணமாகாத இருவரின் உறவு சம்பந்தப்பட்டது. ‘மலரும் மணமும்’ ‘முள்ளும் ரோஜாவும்' விஷயம் வேறு. மணமான நிலையில் ஆசை வெறியில் ஏற்பட்ட பின்விளை வுகள் பற்றியது. 'ஊமச்சி காதல்' தமாஷானது என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மற்ற கதைகள் பிரச்னைகள் வேறானவை. ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பமாக வாழ்க்கயைத் தொடர மணமுறை ஒரு சமுதாய நியதியாக

289