பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா


கு.ப.ரா. கதையில் கோணம் மாறுதல் குறிப்பிடத்தக்கது. காதல் வழி மணம் என்றால், அதுவும் பெற்றோருக்கு பிடிக்காத, சமூகம் விரும்பாததாக இருந்து விட்டால், அதில் தோல்வியுற்று மனமுறிந்து காதலர்கள் தங்களை அழித்துக் கொள்வது அல்லது பிறரால் அழிக்கப்படுவது (அனார்கலி விஷயம்) நடந்து வாழ்வு முடிவது தான் கையாளப்பட்டிருக்கிறது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் கூட வேறு விதமான, ஒரு தரப்பின் குற்றத்தால் துக்ககரமாக ஆகிவிடுகிறது. ஆனால் கு.ப.ரா. இந்த பழசாகிவிட்ட கோணங்களிலிருந்து தன் பார்வையை திருப்பி புதுக்கோணத்தில் பார்க்கிறார். மேலே குறிப்பிட்ட கடிதம் அதை நிரூபிக்கிறது. சிறுவயதில் ஏற்பட்ட பற்று, அவனை பனிரெண்டு வருஷங்களாக பார்க்க விட்டாலும் அவனைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், வளர்ந்து அவன் நினைவாகவே கனவாகவே என்றோ ஒரு நாள் மற்றொருமுறை பார்த்தாலே போதும் என்று எதிர்பார்த்து வாழ்ந்து அந்த கணம் கிடைத்ததும் அதாவது பின் அண்ணன் கல்யாணத்தன்று அவனை சந்திக்கும் சில விநாடிவாய்ப்புக்குப்பின்தன் மனநிறைவைப் பெற்று தன் காதலின் பரிசை பெற்றுவிட்ட திருப்தியுடன் தன் மீதி வாழ் நாளை கழிக்க முடிவு செய்து சோர்வின்றி வாழ்வேன் என்று தன் காதலனிடம் சொல்லும் அளவுக்கு அவள் என்ன மனதிடம் கொள்கிறாள்! அது மட்டும் இல்லை. அவனுக்கும் ஆணையிடுகிறாள், அவனும் தன்மனதோடு மட்டும் லயிக்கச் செய்யும் படியும் தன் லட்சியத்துக்கு மாசு ஏற்படாதபடி நடந்து கொள்ளும் படியும். அவனும் அந்த ஆணையின்படி நடந்து வாழ்ந்து சோர்வு இன்றி மனிநிறைவில் வாழ்கிறான்.

இந்த பார்வை சிறுகதை இலக்கியத்தில் புதியது. புரட்சிகரமானது. இது யதார்த்தமானதா என்று இந்தக் காலத்தில் கேள்வி கேட்கக்கூடும. அசட்டுக் கேள்வி, காதல் என்பதின் புனிதம் தெரியாமல் காமத்தை எடுத்துக் கொண்டு பால் உணர்ச்சி வெளியீட்டுப்படைப்புகள் இன்று மிஷன் உற்பத்தியாக வெளிவருகிற காலகாட்டத்தில், வேறு எப்படி இருக்கும் கேள்விகள்? காதலின் பரிசுத்தம், பரிசுத்தமான காதல் எந்த அளவுக்கு உயர்த்தக்கூடும் என்பதுக்கு இந்த கோணம் நிரூபணம்.

292