பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

யோசனையின் பேரில் உன் விலாசத்தைக் கேட்டு வேலூர்க்கு ‘டெடு அபீஷியலாக' தந்தி அடித்து பதில் வர வழைத்தேன். அது இன்று கிடைத்தது.

நமது பன்னிரண்டாவது வயதில் திருச்சியில் படிக்கும் பொழுது ஒரு சிறு பிள்ளைப் பிதிக்ஞை பண்ணிக் கொண்டோமே, நினைவிருக்கிறதா? நாம் ஒருவரையொருவர் அறியாமல் கலியாணம் செய்து கொள்வதில்லை என்று? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் 22.7.30ல் எனக்குக் கலியாணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ அவசியம் வரவேண்டும்.

உன்அன்புள்ள
குலாம் காதர்.

இந்தக் கடிதம் மின்னலைப் போல என்மனதின் மறதியிருளை அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்தப்பத்து வருஷங்களாக பரதேசிபோல் திரிந்த பொழுதும் உப்புசத்யாக்ரகத்தின் காரணமாக ஆறுமாதம் சிறையிலிருந்த பொழுதும் அடிக்கடி மனதில்தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண்ணுருவம் யாருடையது என்று தவித்தேனே- அப்பா, அது நூருன்னிஸாவுடையதுதான்!

ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமுகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று சஞ்சலித்த இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களிடையே மல்லிகைபோல் கீழிதழைச்சற்றே கடித்து வெளியே தோன்றின பல்வரிசை. இதத்கைய உருவம் மோகினி போல் என் மனதில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே-அது அவளுடையது.

அவளுடைய மனநிலையும் என்னுடைய மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன? இல்லா விட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்? கூட்டத்தில் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!

குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த சிநேகிதம் ஆரம்பமானது மிகவும் வேடிக்கை. எனது பத்தாவது வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு செகண்டரி பள்ளிக் கூடத்தில் மூன்றாவது வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என்பக்கத்து பையன். பெண் சாயல் கொண்டு வளர்ந்த வாலிபன்.

307