பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


குலாம் என்னைக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும் பொழுது வாசல் பக்கம் கண்னணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிஸா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களை சந்தித்த நிமிஷம் உள்ளே ஓடி விட்டாள்.

அன்று முதல் நானும் குலாம் காதரும் இணை பிரியாது திரிந்தோம். விளையாடினோம், அரட்டைகள் அடித்தோம். ஆகாசக் கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். சதா சர்வகாலமும் நான் அவன் வீட்டில்தான் இருப்பேன். நூருன்னிஸாவும் எங்களுடந்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்று கவனித்துக் கொண்டிருப்பாள். தானும் கூட வியைாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து என்கண்களைப் பொத்துவதில் அவளுக்கோர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒரு வித மகிழ்ச்சி அப்போது உண்டாகும். அவள் கைகள் மிருதுவான ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்து விட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவள் கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு சந்தோஷத்தை அடையும்.

நாலாவது பாரம் வரைநானும் அவனும் இப்படி இருந்தோம். திடீரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள். பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது. பன்னிரெண்டு வருஷங்களுக்குப் பிறகு அவனிடமிருந்து இந்தக்கடிதம் வந்திருக்கிற தென்றால் என் சந்தோஷத்தை என்னென்பது? மறுநாள் இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டேன்.

பந்துக்கள் நிறைந்த மஹாலில் குலாம் என்னைத்தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தான். முகம்மது காஸிம் என்ற வித்வானின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா வர்ஷம். அத்தரும் பன்னீரும் ஜலப்பிரளயமயமாய் வழங்கப்பட்டன. ஆறு மணிக்கு சபை கலைந்தது. குலாம் என்னை பங்களாவின் மேல் மாடியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச்சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

310