பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


என் ஹிருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் ஹிருதயக் கரையில் போய் மோத முடியும்? சாத்தியமில்லை. அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாக்கிக் கொண்டு என்னை ஏன் இங்கு வர வழைத்தாள் பின்? என்னிடத்தில் அவளுக்கோர் - அதெப்படி நான் சொல்வது?

இந்த திசையாக என்பேதைமனம் கேள்விகளும் மறு கேள்விகளும் போட்டுக்கொண்டு சமுத்திரம்போல் அலையலையாய் பொங்கிக் கொண்டிருந்தது.

நடுநிசியாயிற்று. எனக்கு தூக்கமே வரவேயில்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து சமுத்திரத்தின் ஓசைதான் காற்றில் மிதந்து வந்தது. திடீரென்று மனதில் ஒரு ஆசை. உதித்தது. ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிஸா பார்க்க வரக்கூடுமோ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர் பார்க்கிறாளோ?’ என்று நினைத்தேன்.

மெதுவான காலடிச்சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிஸா தான். வந்து எனக்கருகே இருந்த ஜன்னலின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவம் தான். வயதிற்கேற்ற வாட்ட சாட்டம் மட்டுமே வித்யாசம். நிலவில் முகம் வியக்தமாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று 'எண்ணியபடி ஆயிற்றே' என்றேன்.

ஒரு விரலால் தன் உதடுகளைப் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என்கையில் கொடுத்தாள். 'இதை ஊருக்குப் போய்ப்படி. நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு. பார்த்தாகி விட்டது. ஒரு நிமிஷம் தாமதிக்கக் கூடாது’ என்று சொல்லித் திரும்பினாள்.

கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள். நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில் கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளிர்த்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.

312