பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அவர் ராஜமய்யரது நூற்றாண்டு விழாவை அவ்வூரில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். நடத்திக்காட்டினார். அய்யர் எழுதிய 'ரேம்பிள்ஸ் இன்வேதாந்தா' என்ற ஆங்கில நூலை உயர்ந்த பதிப்பாக வெளியிட்டு மகிழ்ந்தார்.

அதே போல ராமையாவின் பெருமையையும் வத்தலக்குண்டுக்காரர்கள் அறியவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். சென்னையிலேயே வசித்த செல்லப்பா ஒரு கால கட்டத்தில், இனி வத்தலக்குண்டில் வசிப்பது என்று தீர்மானித்து, மனைவியுடன் அவ்வூர்போய்ச்சேர்ந்தார். சில வருடங்கள் அங்கு அமைதியாகவாழ்ந்தார். பிறகு மீண்டும் சென்னையிலேயே வசிப்பது என்று வந்து சேர்ந்தார்.

அந்த ஊரில் இலக்கியச் சூழ்நிலையே இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு இலக்கிய உணர்வும் ரசனையும் கொஞ்சம் கூட இல்லை. என்னால் இயன்ற அளவு முயன்றேன். அவர்கள் விழிப்படைவதாகத் தெரியவில்லை. ராமையாவின் மதிப்பைத் தெரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள். சின்ன வயசில் ராமையா அவர்களிடையே வளர்ந்து, வறுமையில் கஷ்டப்பட்டது இதுகளையே பெரிதாகச்சொல்லி, ராமையாவை இளப்பமாகக் கருதிப் பேசுகிறார்கள். அவர்களோடு இருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கே வந்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.

சில வருட சென்னை வாசத்துக்குப் பின்னர் அவர் மனைவியுடன் மதுரை சேர்ந்து மகனுடன் வசிக்கலானார். அவருடைய முதுமை, அவரைப் படுத்திய நோய்கள், இவற்றால் அம்மாவும் அப்பாவும் படுகிற சிரமங்களை கவனித்து அவர்களின் ஒரே மகன் சி. மணி இருவரையும் தன்னுடன் வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டேதே காரணம். மணி பேங்கில் பணிபுரிகிறார்.

அவருக்கு உத்தியோக நிமித்தமாக பெங்களூருக்கு இடமாறுதல் ஏற்பட்டது. அவர் குடும்பத்தோடு செல்லப்பாவும் பெங்களுர் சென்றார். தமிழ்நாட்டை விட்டுப்போய் வேற்றுமாநிலத்தில் வாழ வேண்டியிருக்கிறதே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.

25