பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விமர்சன விழாக்கள்

க. சங்கர சுப்ரமண்யன்

திட்டமிட்ட அளவில் இலக்கியம் பற்றி ஆராய்ந்து கருத்தறிவிக்க சமீபத்தில் நடைபெற்ற மூன்று விழாக்கள் தனிச் சிறப்புப் பெறுகின்றன. அந்தச் சிறப்பைச்சாதித்த நண்பர் வட்டம், பவர் ஸ்தாபனம், பட்டிமன்றம் மூன்று அமைப்புக்களும் இலக்கியவாதிகளின் ஏகோபித்த பாராட்டுக்கு ஆளாகி இருப்பது நியாயமே.

நண்பர் வட்டம்

கிறிஸ்தவ இலக்கிச் சங்கத்தைச் சேர்ந்த நண்பர் வட்டத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13,14 தேதிகளில் நாவல் சிறுகதை பற்றிய கருத்தரங்கு ஒன்று நடத்தினார்கள். நாவலுக்கும் சிறுகதைக்கும் தனித்தனியே ஒதுக்கி, ஒவ்வொரு நாளும் நான்கு அமர்வுகளாகப் பிரித்து, தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவற்றின் மீது உரையாடலுக்கும் வழி செய்யப்பட்டது. தவிரவும், குறிப்பிட்ட நாவல்கள், சிறுகதைகள் மீதான திறனாய்வுக் கட்டுரைகளும் படிக்கப்பட்டன.

அழைப்புப் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் அனாவசிய இழுபறிப் போக்குள் தலை காட்டாமல், பெரும்பாலும் நேரப்படியே கருத்துரைகளும் விவாதங்களும் நடந்து முடிந்ததைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். பெ.நா. அப்புசாமி, சோ. சிவபாத சுந்தரம், கி.வா. ஜகந்நாதன், அகிலன், ஜெயகாந்தன், கணமுத்தையா, சரஸ்வதி ராம்னாத், சி.சு. செல்லப்பா, ஆ.தே. மனுவேல், கு. அழகிரிசாமி, நா. பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, எழில்முதல்வன், ரா. ராஜதுரை, ராஜம் கிருஷ்ணன், பொ. ஆ. சத்தியசாட்சி முதலியோர் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றினார்கள். விமலாமனுவேல், தண்டாயுதம், சி. தேவராஜன்,

315