பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

மூன்று அமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். ந. சிதம்பர சுப்ரமண்யன், பி.எஸ். ராமையா. ந. பிச்சமூர்த்தி மூவரும் தலைமை வகித்ததைப் பார்த்தால், மணிக்கொடி யுகத்தைப் பற்றிய பிரமைகள் நீங்கி அதனோடு தொடர்பு கொண்டவர்கள் உரிய மதிப்புப் பெறுவதை உணர முடிகிறது.

சிறுகதை அமர்வுக்குத் தலைமை வகித்த சிதம்பரசுப்ரமண்யன், ‘ருசி பலவிதம்’ என்கிற அடிப்படைத் தத்துவத்தைச் சுட்டிக்காட்டி, மதிப்பீட்டு வேலையில் உள்ள சிரமத்தை குறிப்பிட்டு பொதுநோக்கு உருவாவதிலுள்ள சங்கடத்தையும் விளக்கினார். கலைக்கண் நோக்கு பக்திக்கண்ணோட்டம் விஷயத்துக்கும் ஆசிரியருக்கும் உள்ள உறவு, கலைப்பொருளின்மீது ஏற்றப்படும் மதிப்பின் மாறுபடும்தன்மைகள் ஆகியவற்றை தக்க உதாரணங்களுடன் விளக்கினார்.

கி. சந்திரசேகரனுடைய கருத்துக்கள் தெளிவாகவே இருந்தன. ‘திறனாய்வு சாத்யமில்லை', உயிரோடு இருப்பவர்களை விட்டுவிட வேண்டும் 'அரங்கத்தில் ரசக்குறைவாகப் பேசக்கூடாது', 'மனம் விட்டுப்பேசுவது முற்றிலும் முடியாது’ போன்ற வரிகளைக் குறித்தக் கொள்ள முடிந்தது. இவைகள் ரசானுபவத்தின் அடிப்படைத் தத்துவமாக இருக்கலாமே ஒழிய விமரிசனக் கலையின் நடை முறைக்கு ஒத்து வராது என்பதை, துறையில் காலை வைத்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

உயிரோடு இருப்பவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும் என்றும், விமர்சனத்தைத் தாங்கும் தெம்பு தேவை என்றும் ராமையா அழுத்தமாகவே பேசினார். நூற்றுக்கணக்கில் எழுதுவதும், லட்சக் கணக்கில் படிப்பதுமாக நிலை இருந்தும், பேத்தல்கள் பெருகி இருக்கின்றன என்பது அவரது கருத்து. அனுபவம் விரிந்து அதைப் படைப்பாக்கப் பாடுபடும் போது அதைப்பற்றிய அபிப்ராயம் தேவைப்படுகிறது என்பதையும், குணச்சித்திரம் உருவாகாதது இன்றைய எழுத்தின் குறை என்றும் அவர் மேலும் விவரித்தார்.

படைப்பு பற்றிய நுணுக்க அறிவு ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்பது எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் கருத்து. தற்போது கச்சிதமான உருவம் இருப்பதில்லை என்று குறிப்பிட்டவர், கிறுக்குச் சேஷ்டைகள் இருந்தால் தான் படைப்புக்கள் மதிக்கப்படுவதை ஒப்புக்கொள்ள மறுத்தார்.

317