பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


நல்ல படைப்புக்கள் தக்கபடி மதிப்புப் பெறாததும், தகுதியற்றவை பாராட்டப் படுவதும் துரதிருஷ்டமானது என்றார் ஆர்வி. 'எழுத்தாளர்களை நம்பி பத்திரிகைகள் நடப்பதில்லை' என்று அவர் சொன்னது உண்மையிலேயே சிந்திக்கத் தக்கதாகும். ‘எழுதுபவரின் அந்தஸ்துக்காக கதை பிரசுரிக்கப்படுகிறது' என்கிற நா. பார்த்தசாரதியின் கருத்தையும் சேர்த்துக் கொண்டால், அசல் எழுத்தாளர்களின் வருங்காலம் கவலைக்குரியதுதான். ‘பத்திரிகைகளை நம்பி எழுத்தாளர்கள் படைக்கவில்லை' என்ற தெம்புத் நிலைபெற்றால்தான் சூழ்நிலையைச் சமாளிக்க முடியும்.

விடுதலைக்கு முன், பின் என்று பிரித்துக் கொண்டு பார்வை செலுத்திய எழில்முதல்வன் ‘அரிமாநோக்கு வேண்டும்' என்று வலியுறுத்தினார். பல்வேறு தேவைகளுக்காகவும் பொழுது போக்குக்காகவும் எழுதுவது பெருகும் போது நல்ல வளர்ச்சி மறைக்கப்படுகிறது என்பது அவர் கருத்து. கருத்துப் பரிமாறுதல்களின் அவசியத்தை தி.பி.சுந்தரம் வலியுறுத்த, பத்திரின்ககளில் சிறுகதைகளின் இடம் குறைந்து வருவதை நா. பார்த்தசாரதி சுட்டிக் காட்டி, இலக்கியப் புறம்பான போக்குகளை எதிர்க்க தார்மீக யுத்தம் துவக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'ஆளைப் பார்க்காமல் எழுத்தைப் பார்க்க வேண்டும்’ என்பது நாரண துரைக்கண்ணனின் கோரிக்கை. நியாயமானதுதான். இந்த நெறி விமர்சனத்துக்கும் பொருந்தும். விமர்சனம் செய்வது யார் என்று பார்க்காமல், என்ன சொல்லப்படுகிறது என்பதைக்கவனிக்கும் பொறுமையும், மதித்துப் பரிசீலிக்கும் பக்குவமும் எழுத்தாளனுக்கு வேண்டும் என்பதைச்சொல்லி வைக்கத் தோன்றுகிறது.

‘இலக்கியப் போக்குகளைக் கிளறிப் பார்ப்பதே கணக்குப்பார்ப்பது' என்று இலக்கணம் வகுத்துக் கொண்ட ஜெயகாந்தன், அண்மைக் காலமாக தென்படுகிற கட்சி கட்டுகிற போக்கைக்கண்டித்தார். குளத்தங்கரை அரசமரம் கதையைத் தொட்டு ஆரம்பித்த சி.சு. செல்லப்பா, கலைத்தன்மை, யதார்த்தம், மண்வாடை, அனுபவம், கற்பனை, மரபு பற்றிய உணர்வு, இலக்கிய இன்பம் ஆகியவைபற்றி விளக்கிப் பேசினார். இன்றைய ஒழுக்கச் சிதைவைக் குறிப்பிட்டு, ஜனங்கள் எப்படியோ ராஜா அப்படியே என்று முடிவுரை வழங்கினார் சிதம்பர சுப்ரமண்யன்.

318