பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

எழில்முதல்வன்சுட்டிக்காட்டினார். இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை இல்லாததே சோதனை முயற்சிகளுக்குக் காரணம் என்பது ரங்கராஜன் முடிவு. எழுத்தாளர்கள் தங்களையே பல்வேறு படைப்புக்களில் காப்பியடிப்பது வேதனையான அம்சம் என்று விளக்கிய சி.சு.செல்லப்பா, புதிய கருப்பொருள்கள் தேடுவதன் அவசியத்தையும் 'எழுதும் முறையில்' அக்கறை வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார்.

கவிதை- விமர்சனம் அமர்வுக்குத் தலைமை வகித்த ந.பிச்சமூர்த்தி, மரபுக் கவிதை எழுதியிருப்பவர் என்பதோடு புதுக்கவிதையின் முன்னோடியாக விளங்குபவர். கவிதை பற்றிக் கூறியது. சொற்செட்டுடன் விளங்கியது. அன்றும் இன்றும் அவருடைய எழுத்தின் தனித்தன்மை அந்தச் சொல்லாட்சிதான். வழக்காடும் தொழிலுக்குத் தயாரானவர் வாதங்களில் சிக்கிக் கொள்வது கிடையாது. இலக்கியத்தை அந்தரங்கசுத்தியோடு சமைப்பதையும் அணுகுவதையும் வற்புறுத்துவதே அவருடைய பேச்கின் சாரமாக அமைந்ததில் வியப்பில்லை.

நா. பார்த்தசாரதியின் கவிதைக்கணிப்பு சங்க காலத்தில் துவங்கி, பாரதியின் திருப்பு முனையைத் தொட்டு, புதுக்கவிதை மீது பட்டு நகர்ந்ததில் பல கவிஞர்களின் பெயர்கள் விழுந்தன. சங்க காலத்தில் மூழ்கி விடாததும், பாரதியோடு முடித்து விடாததும் வரவேற்கத் தக்க அம்சங்கள். புதுக்கவிதை பற்றிய அவரது ஈடுபாடு ‘கூட்டு சேராக் கொள்கை'யாகப் பரிணமித்ததைப்பற்றி ஒரு வார்த்தை. அரசியிலில் அந்தக் கொள்கைக்குள்ள நடைமுறைச் சிதைவைப் புரிந்து கொண்டால், இலக்கியத்திலும் அதன் 'ஆபத்து’ விளங்கும். சார்புகள் தேவையற்ற சங்கதி. நயம் காணும் மனப்பான்மை விரிவாக நிலைத்தால் சரி.

புதுக்கவிதை, விமர்சனம் இரண்டுமே செல்லப்பாவுக்கு இன்றைய 'மூச்சுப்பிரச்னை' என்று கொள்ளலாம். வெறும் கொள்கை விளக்கத்தைத் தாண்டி, வரிகளை வைத்து அனுபவ உணர்வை எழுப்புவதில் அவருக்குள்ள நம்பிக்கைக்கு அன்று நல்ல வாய்ப்பு. கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் ஒழுங்கு நியதிக்குப் பழகியவர்களாதலால் முறையான விமர்சன வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு உதவக் கூடும் என்பது அவரது கருத்து.

320