உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளி வருகிறது. 2000 பிரதிகளுக்கும் மேல் அச்சாகாது, நேரில் சந்தாதாரராகச் சேருபவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவைதான். வாசகர்களின் தொகையைக் கட்டுப் படுத்திக் கொள்வதற்காக அல்ல; இலக்கிய வாசகர்களை தேடிப்பிடிப்பதுதான் ‘எழுத்து'க்கு நோக்கம். ஏனெனில் 'பிடித்தமானது' என்ற சாக்கில் பொது வாசகர்களை திருப்திபடுத்துவதற்கான வழிகளை எழுத்து கையாளும், உத்தேசம் இல்லை. 'எழுத்து எனக்குப் பிடித்து இருக்கிறது' என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அவர்ளைத் தேடும் எழுத்து. எழுத்து தன்முன் கொண்டுள்ள பார்வையைப் பற்றி சொல்லிவிட்டது. இலக்கிய வாசகர்களின் ஆதரவை எதிர்பார்த்து ஒரு துணிச்சலான முயற்சியாக வரும் 'எழுத்து க்கு தமிழகம் தன் அரவணைப்பைத் தந்து, அது ஏட்டின் பின் ஏடாக அடுக்கு ஏற வகை செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த முதல் ஏடு உங்கள் முன் வைக்கப்படுகிறது.

அழைப்பு அபிப்ராயம் க.நா.சு.
சாகித்ய அகாடமி தமிழ் பரிசு


வளரும் தமிழ் இலக்கியத்துக்கும் டெல்லி, சாஹித்திய அகாடமிக்கும் ஒருவித தொடர்புமேயில்லை என்பது அவர்கள் இதுவரை அளித்திருக்கிற மூன்று பரிசுகளிலிருந்து ஓரளவு தெளிவாகவே தெரிகிறது. சாஹித்திய அகாடமியார் இதுவரை தமிழுக்கு மூன்று பரிசுகள் அளித்திருக்கிறார்கள். பரிசுபெற்ற இந்த மூன்று நூல்களுமே இலக்கிய ரீதியில் வளரும் தமிழ் இலக்கியத்தில் நல்ல ஸ்தானம் பெறக்கூடிவவையல்ல. சாஹித்திய அகாடமியார் பரிசளிப்பது சாஹித்தியத்துக்காகத்தானே இருக்கவேண்டும்? அதற்குப்பதில் அவர்கள் ஆசிரியர்களின் ஸ்தானத்தை மட்டுமே மனசில் கொண்டு பரிசளித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. பிற இந்திய மொழிகளில் இந்த மூன்று நூல்களையும் மொழி பெயர்த்துத் தந்தால் இன்றையத் தமிழில் நல்ல இலக்கியம் எதுவுமே இல்லையோ என்று பிறர் நினைக்க இடம் இருக்கிறது.

34