பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

உயர்த்துவதற்காகப் பயன்படக் கூடியன மாதவையாவின் கதைகள்; கள் குடிப்பதை ஒழிக்க உபயோகப்படக்கூடியவை ராஜாஜி கதைகள் என்றும், பழைய தலைமுறைச் சரித்திரங்களை அறிந்து கொள்ள உ.வெ. சாமிநாதய்யரின் கதைகள் உதவும் என்றும், வெறும் பொழுது போக்காக எஸ்.வி.வி.யின் கதைகள் உதவும் என்றும் பொதுவாகச் சொல்லாம். இவற்றிலே இலக்கியத்தரம் ஏற்றிவைப்பதற்கில்லை. இந்த பழைய கதாசிரியர்களுக்கு வாரிசுகளாக இன்று கதைகள் எழுதுபவர்களில் கி.வா. ஜகந்நாதனையும், பெ. தூரனையும் சொல்லலாம். சந்தர்ப்ப விஷேசத்தால் மணிக் கொடி கோஷ்டி யினருக்குத் தலைவராக ஒரு சிலரால் கருதப்படும் பி.எஸ்.ராமையாவின் கதைகளும் (பொதுவாக) இந்த ரகத்தைச் சேர்ந்தவையே என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டாவதாகச் சொல்ல வேண்டியது பத்திரிகைக் கதைகள், 1930-ம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து தமிழில் பத்திரிகை யுகம் அதன் உச்சியை எட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படிச் சொல்லுகிற போது பத்திரிக்கை அவசரம், நெருக்கடி, எல்லாமாகச் சேர்ந்து அமைந்த கதைகளைச் சொல்லலாம். கல்கி இத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். இந்தப் பத்திரிகைக் கதைகளுக்கு பல்லாயிரக் கணக்கான வாசகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தவரும் கல்கிதான். கல்கியின் கதைகளில் அநேகமாக எல்லாமே பிறர் கதை அஸ்திவாரத்தில் தோன்றியவைதான். சற்றே மாற்றியோ திருத்தியோ, தமிழில் உருவம் என்று அவருக்கு எட்டாததொன்றைத் கற்பனை செய்து கொண்டு உருமாற்றி வைக்கப் பட்டவைதான். அவரைப் பின்பற்றிப் பலரும் பத்திரிகைக் கதை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது கதைக்கும் சிறுகதைக்கும் இடையில் ஒரு உருவம் இது. இலக்கிய ரீதியில் கவனித்தால் ஒரு விதமான குண விசேஷமும் இல்லாதது. எத்தனையோ பேர் சாதாரணமாகக் கையாண்ட விஷயங்களை மறுபடியும் ஒரு தரம் படிக்கக்கூடிய பாஷையிலே, சிரமப்படுத்தாத வகையிலே எழுதியிருக்கிறார்கள். இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கான இன்றைய ஆசிரியர்களைச் சொல்லலாம். வாசகர்களை நினைவில் வைத்துக் கொண்டு கதைகள் எழுதுபவர்கள் இவர்கள்; பத்திரிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே எழுதுபவர்கள். தமிழ்நாட்டில் சிறு கதைப் பரிசுகள் பலவற்றையும் தட்டிக் கொண்டு

50