பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

போகிறவர்கள் இவர்களாகத்தான் இருக்கமுடியும்; குறிப்பிட்ட பஞ்சாயத்தார் ஐந்து பேரைத் திருப்தி செய்யக் கூடியவர்கள் இவர்கள். இக்கு பட்டியல் தருவதென்று ஆரம்பித்தால் இடம் போதாது. ஆனால் இந்தப்பத்திரிகை ரகத்திலே, குறிப்பாக வெற்றி பெற்றவர்கள் என்று அகிலன், பூவாளுர் சுந்தரராமன், சிரஞ்சீவி முதலியவர்களைச் சொல்லவேண்டும். இந்தப்பட்டியலில் இடம் பெறுபவர்கள் என்று சுகி, ரஸவாதி, ரா.கி. ரங்கராஜன், எல்லார்வி, மாயாவி போன்ற பலரைச் சொல்லலாம்.

தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்று ஒன்று வெளியிட வேண்டும் என்று எனக்குப் பணியளிக்கப் பட்டால் இவர்களையும், இவர்களுக்கு முந்திய வகுப்பில் சேர்ந்தவர்களாகச் சொல்லிய கதாசிரியர்களையும் நான் சேர்க்க மாட்டேன் என்பது தெளிவு. இப்போது அப்படிப்பட்ட தொகுப்புநூலில் யார்யாரைச்சேர்க்கலாம் என்பது பற்றி இலக்கிய விமர்சன ரீதியில் பார்க்கலாம்.

இலக்கிய ரீதியில் சிறு கதைக்கு இலக்கியப் பிரக்ஞையுடன் அமைந்த உருவம் வேண்டும். அதுதான் ஒரு குறிப்பிட்ட சிறு கதையை, கதை, பத்திரிக்கைக் கதை என்கிற தரத்திலிருந்து உயர்த்தி இலக்கிய பூர்வமான சிறு கதையாக்குகிறது என்று சொன்னேன். தமிழுக்கு மட்டுமல்ல. உலக இலக்கியப்பரப்புக்கே சிறுகதைத்துறை புதுத்துறைதான். ஆகவே பெரும்பாலும் நல்ல சிறு கதாசிரியர்கள் என்று உலக இலக்கியத்தில் இடம் பெறுபவர்கள் எல்லோருமே இலக்கிய சோதனைக்காரர்கள்தான். சுவடு தெரிகிறதடத்திலே செல்ல மறுத்து, புதுத் தடம் போட்டுக் கொண்டு, இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத் தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம். இதிலே ஒரளவேனும் வெற்றி பெற்றவர்களைத் தான் சிறந்த சிறு கதாசிரியர்கள் என்று சொல்ல வேண்டும். இப்படி வெற்றி பெற்ற முதல் தமிழ்ச் சிறு கதாசிரியர்களில் பலர், அந்தக் காலத்தில் ‘மணிக்கொடி என்கிற அல்பாயுஸ்-ப் பத்திரிகையில் தங்கள் சிரஞ்சீவிக் கதைகளை எழுதினார்கள். அதற்கும் மணிக்கொடிக்குச்சிறிதும் பொறுப்பில்லை என்றாலும் கூட, மணிக்கொடி கோஷ்டி என்கிற ஒரு பெயர்நிலைத்து விட்டது. அதனால் நஷ்டம் ஒன்றுமில்லையே!

51