பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சிறப்பாகச் சொல்லாம். முன்னிருவர் சிறு கதைகளிலும் சோதனை அம்சங்கள் மிகக் குறைவு. ஒரு சாதாரண நிலையில் நின்று கதை சொல்வதை, இலக்கிய அந்தஸ்தைத் தொட்டும் தொடாமலும் செய்பவர் தி.ஜ.ர.குமாரஸ்வாமியின் சிறு கதைகளிலே ஒரு romantic metacholy யும் காதல் கட்டமும் சிறப்புக்கள். சங்கரராம் வேட்டைக் கதைகள், மாட்டுக் கதைகள், நாட்டுக் கதைகள் பல எழுதியுள்ளார். இவை பத்திரிக்கைக் கதைகளின் அம்சங்கள் பூராவும் பொருந்தி, ஒரளவு இலக்கிய நயமும் உள்ளவை.

1940க்குப் பிறகு தோன்றிய சிறு கதாசிரியர்களிலே சிறப்பாக மூன்று பேர்களைச் சொல்ல வேண்டும். இலக்கிய ரீதியில் லா.ச.ராமாம்ருதம் ஒரு சோதனைச் சிறு கதாசிரியர். அவர் ஒரே மாதிரியான சோதனைதான் செய்கிறார். சோதனைகளைப் புதுமைப்பித்தன் மாதிரி மாற்ற்ாமல், மெளனி மாதிரி, ஒரே ரீதியில் செய்பவர். இதில் அவர் நல்ல வெற்றி பெற்றிருக்கிறார் - கொட்டு மேளம், இதழ்கள் போன்ற கதைகளில். இரண்டாவதாகச் சொல்லவேண்டியவர் தி.ஜானகிராமன். இவருடைய சிறு கதைகளிலும் சோதனைப் பரப்பு குறைவு. ஆனால் இவர் சிறு கதைகளிலே தனித்துவமும், ஒரு கிண்டலும், பேச்சு நடையும், உருவமற்ற ஒரு உருவமும் தெரிகின்றன. மூன்றாவதாகச்சொல்ல வேண்டியது. அழகிரிசாமி. குரலை உயர்த்தாமல் தன்சிறுகதைகளில் பலவிதமான விந்தைகளைச் செய்து காட்டுகிறார். நடை வேகத்தை முடுக்காமல்அவர் செய்துள்ள சோதனைகளை வெற்றிகரமாக அவர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

1948க்குப் பிறகு தமிழ்ச்சிறுகதைகளிலே சோதனைவேகமும், இலக்கிய நோக்கம் தேய்ந்துவிட்ட மாதிரித் தோன்றுகிறது. சமீப காலத்தில் அதாவது இப்போது இரண்டொரு வருஷங்களாகத் தான் மீண்டும் உயிர் வந்த மாதிரி இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமாக அதுவரை செய்யப்பட்ட இலக்கிய முயற்சிகளைச் சரிவரத் தராதரம் அறிந்து கணிக்க யாரும் முயற்சி செய்யாததையும், பத்திரிகை ஆதிக்கம் எழுத்திலே அதிகமாகி விட்டதையும் சொல்லலாம். இந்தப் பத்து வருஷங்களில்

54