பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

தன்னுடைய அறையில் கதவைத்திறந்து வைத்தவாறு படுத்துக்கொண்டிருந்த கல்யாணிக்கு அப்பொழுது எதைப் பற்றியும் சிந்திக்க பயமாய் இருந்தது. தான் அடக்க முயன்ற சிந்தனைகள் ஏற்கெனவே அடங்கிக்கிடந்த நினைவுகளால் உந்தப்பட்டு வெளியேறி அவள் கற்பனையில் பவனி வரத் தொடங்கின. தன் மணவாழ்க்கையின் ஏழு வருஷங்களில் எத்தனையோ நாட்கள் இம்மாதிரி அவள் தன் எண்ணங்களுடன் போராடி இருக்கிறாள். நல்ல பண்பும், உயர்ந்த மனப்பான்மையும் இயற்கையிலேயே பெற்றிருந்ததால் அவள் அதிகமாக தன்னைப்பற்றிக் கவலைப் பட்டதில்லை. ஏழைக் குடும்பத்தின் முதல் பெண்ணாய்ப் பிறந்த பலனை சகோதர சகோதரிகளுக்கு உழைக்கும் பாக்கியமாகக் கருதிப் பெற்றாள். கஷ்டப்பட்டு தன்னை விவாகம் செய்வித்தபோது தன் தாய்தந்தையருக்கு இனி அதிகமாய் உதவியாய் இருக்க முடியாதே என்ற குறைதான் அவளுக்குச் சிறிது வருத்தம் கொடுத்தது.

அவளைமனைவியாக அடைந்தபோது நல்ல வேலையில்தான் இருந்தான். இவள் அதிர்ஷ்டம் வீட்டில் கால் வைத்த மூன்று மாதத்தில் வேலை போய்விட்டது என்பது ஒரு சாரார் கருத்து. நாகராஜன் கெட்டிக்காரனாயிருந்தாலும் நிலைத்து ஓரிடத்தில் வேலையிலிருக்கமாட்டான் என்பது மற்றோரு சாரார் துணிபு.

ரசனை

‘ஒரு கற்பனையான படைப்பு நூலின் உண்மையான மேன்மைக்கும் அதை ரசிப்பதற்கு சகலமானவர்களுக்கும் உள்ள திறமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உண்மையான சோதனை இதுதான் - அதை ரொம்பவும் ரசிக்கும் ஒருவனுக்கு அது அளிக்கக்கூடிய திருப்தி அளவும் திருப்தி விதமும்தான்.'
என்று அமெரிக்க தத்துவாசிரியரும், நாவலாசிரியருமான ஜார்ஜ் ஸாந்தாயனா கூறி இருக்கிறார். இந்த கருத்தை ஒட்டி ஸ்டீபன் பெப்பர் என்ற கலை விமர்சகர் கூறி இருப்பதாவது:
எவ்வளவு பேர்கள் ஒரு கலை வடிவத்தை ரசிக்கிறார்கள் என்பதற்கும் அந்த கலை வடிவத்தின் அழகு மதிப்புக்கும் எத்தகைய சம்பந்தமும் கிடையாது. அதை போதிய அளவு உய்த்து உணர்கிறவர்களுக்கு அது தருகிற மகிழ்ச்சி அளவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

62