அதிகம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது தன்னுடைய வளர்ச்சிக்கு மட்டுமின்றி நவீன தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு சி.சு. செல்லப்பாவின் பணியைப் பற்றி அடிக்கடி எடுத்துரைப்பார். அதோடு தன்னை விட வயதில் மூத்தவர் என்றும் கூறியுள்ளார், வல்லிக்கண்ணனின் முத்துவிழா கூட்டத்தில், தனது ஏற்புரையில் வல்லிக்கண்ணன் அவரது நண்பரும், முன்னோடியுமான சி.சு. செல்லப்பாவிற்கு ஏதாவது நினைவு செய்யவேண்டும். அது தீபம் யுகம் போல் புத்தகமாக இருக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளை வைத்தார். எனது நன்றியுரையில் அப்படியே செய்யலாம் என்ற நம்பிக்கையை தெரிவித்தேன். கடந்த ஒரு வருடமாக பணி தொடர்ந்து நடைபெற்று “எழுத்து" - "சி.சு. செல்லப்பா" என்ற கட்டுரைத் தொகுப்பு இன்று நூலாக உருப்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 'எழுத்து' வின் அவ்வளவு ஏடுகளையும் எங்கிருந்து பெறுவது என்று வல்லிக்கண்ணன் அவர்களிடம் கூறியபொழுது, நானே வைத்திருக்கிறேன் தருகிறேன் என்றார். பத்து கட்டுகளையும் சின்னக்குத்தூசியிடம் கொடுத்து எழுத்து மதிப்பீட்டை எழுதும்படி கேட்டுக்கொண்டார். ஜுனியர் விகடனில் 2000ம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் "எத்தனை மனிதர்கள்" என்ற தலைப்பில் தமிழ்ச்சான்றோர்களின் வரலாற்றை சுவைபட எழுதிப் பெருமை சேர்த்தவர் சின்னக்குத்தூசி ஆவார். மேலும் சி.சு. செல்லப்பாவின் கடைசி காலத்தில் அணுக்கத் தொண்டராகப் பழகிய ஏ.என்.எஸ். மணியனிடம் ஒரு கட்டுரை வாங்கினால், அவரது வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து அவருக்கு உதவி செய்தவரின் அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுதிக்கு மெருகு சேர்க்கும் என்ற அவாவின் அடிப்படையில் வல்லிக்கண்ணன் ஓர் கட்டுரையைப் பெற்றுச் இதில் சேர்த்துள்ளார். தி.க.சியிடம் விமர்சனக் கண்ணோட்டத்தில் ஓர் கட்டுரை கடைசி நேரத்தில் பெற்றுச் சேர்த்தேன். பல முறை தொலைபேசியில் பேசிய பிறகு, தனது முதுமையையும், நோயின் தொல்லைகளையும் பொருட்படுத்தாது சிரமம் பாராட்டாமல், தான் கூற பிறரிடம் எழுதச் சொல்லி, அவர் கட்டுரையை அனுப்பி வைத்தார். ஜனவரி 59ல் முதன் முதலில் வந்த எழுத்து பிரதியையும் கடைசியாக 1970ல் (ஜனவரி - மார்ச்) வெளிவந்த காலாண்டு இதழையும் இக்கட்டுரைத் தொகுப்பில் இணைத்துள்ளேன்.