பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

டாக்டர் சாமிநாதையர் அவர்கள் தமிழ் நாடு எங்கும் தேடித்திரிந்து, சுவடிகளைக் கண்டு பிடித்து, பதிப்பித்து அச்சிட்ட சரிதங்களைப் படிக்கும்போது நமக்கு ஒரு காவியத்தை படிப்பது போன்றதோர் உணர்ச்சியே ஏற்படும். ஜைன, பெளத்த நூல்களான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றைப் பதிப்பித்த காரணத்தினால் சாமிநாதையர் பலவித கண்டனங்களுக் குள்ளானதெல்லாம் பழங்கதை ஆனால் சுவாரசியமான கதை. பத்துப்பாட்டு, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு இவையெல்லாம் ஐயரவர்களின் பதிப்புகளாக வெளிவந்தன.

அவரைப் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியாக மட்டும் நாம் கொள்வது பொருந்தாது.பிற்காலத்தில் அவர் எழுதிய வசன நூல்கள் பலவும் நமது கவனத்துக்குரியன. 1942 வரையில் உயிர் வாழ்ந்த சாமிநாதையர் ஒரு நூற்றாண்டுக்கே பிரதிநிதியாகப் பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார். நினைவு மஞ்சரி, உரைநடைக் கோவை, முதலிய கட்டுரைத் தொகுப்புக்களில் சென்ற நாலைந்து தலைமுறைகளின் சரித்திரத்தையும், பழக்க வழக்கங்களையும் தமிழ் மக்களையும் நாம் காணமுடிகிறது. இலக்கிய நயத்துடனும் அமைதியுடனும் டாக்டர் சாமிநாதையருடைய நினைவுக் கட்டுரைகள் நமது முன்னோர்களை (அதாவது சமீபகாலத்திய முன்னோர்களை) நாம் அறிந்து கொள்வதற்கான அரிய பொக்கிஷமாக உதவுகிறது. அவர் எழுதியுள்ள பல ஜீவிய சரித்திரங்களிலும் - கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவற்றிலும் பல சுவையான வரலாறுகள் காணக் கிடக்கின்றன. இந்த இடைக்காலத்தை நமக்கு இவ்வளவு தெளிவாக எடுத்துக்காட்டுகிற வேறு தமிழ்நூல்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். சாமிநாதையரின் என் சரித்திரமும் நமது சரித்திரத்தில் சென்ற நூற்றாண்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

சாமிநாதையரைப்பற்றித் தமிழில் வந்துள்ள கட்டுரைகளில் இரண்டு பேர் எழுதியவை மிகவும் முக்கியமானவை. 1.டி.கே.சி. எழுதிய தியாகராஜ விலாசம் அல்லது புலவர்தொழில் (இதய ஒலியில் உள்ளது) 2. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ்ச்சுடர் மணிகளில் சாமிநாதையர் பற்றி உள்ள தொண்டின் பெருமை, வாழ்க்கையும் மதிப்பும், நினைவு நாள் என்ற கட்டுரைத் தொடர்.

க.நா.சு.
68