பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கமலாம்பாள் சரித்திரம்
-பி.ஆர்.ராஜம் அய்யர் நாவல்-
சி.சு.செல்லப்பா

கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர் என்ற புகழ் ஒரு முகமாகக் இடைக்கப் பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமய்யர். அவர் 1889-ல் தன் 26-வயதில் காலமாவதற்கு முன் 21-வது வயதில் எழுத ஆரம்பித்து, மூன்று வருஷ காலம் தொடர்ந்து, ‘விவேகசிந்தாமணி என்ற மாதப் பத்திரிக்கையில் சிறிது சிறிதாக தொடர் நாவலாக வெளிவந்த நாவல் அது. மொத்தமாக எழுதி முடித்து அது தொடர்ந்து வெளிவந்ததா, இல்லை தற்போது பல தொடர் நாவல் ஆசிரியர்கள் இதழ் பார்த்து மறு இதழுக்கு சுடச்சுட எழுதி வருவதைப் போல் எழுதப்பட்டதா என்ற தகவல் எதுவும் கிடைக்க வழியில்லை. இந்தநாவலின் முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு அதோடு ஒப்பிடக் கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை என்று அடித்துச் சொல்லும் ரசிகர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு அந்த வார்த்தைகள் செல்லக்கூடியவை, என்ன ஆதாரவலுக்கொண்டு ஆராய்ந்து முடிவுகட்டப் பட்டிருக்கிறது, வளரும் தமிழ் நாவல் இலக்கியத்தில் அதன் ஸ்தானம் என்ன ஆகிய கேள்விகள் இலக்கிய விமர்சன ரீதியாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டியவை.

‘கமலாம்பாள் நாவலை எடுத்துக் கொண்டு சோதித்துப் பார்க்கப் புறப்படுமுன், இலக்கிய விமர்சனம் சம்பந்தமாக சில வார்த்தைகள் சொல்ல வேண்டி இருக்கிறது. நாவலும் சிறுகதையும் நமக்கு கப்பல் மூலம் இறங்கிக் கிடைத்த புதுச்சரக்காக இருப்பது போலவே அவை பற்றிய இலக்கிய விமர்சன முறையும் நமக்குப் புதிதுதான். எத்தனை விதங்களில் ஒரு இலக்கிய சிருஷ்டியை அணுகுவது என்பதைப் பற்றி, அநுபவரீதியாக, இந்த இலக்கியப் பிரிவுகள்முன்னதாகவே செழித்து வளர்ந்திருக்கும் பாஷைக்காரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்து, நிதானித்து இருப்பதும், இன்னும், விண்டு பார்த்து அபிப்ராயங்கள் சொல்லி வருவதும் நமக்கு முன் இருப்பவை. அவைகளை கவனத்தில் கொண்டு நம் இலக்கிய நூல்களை ஆராய வேண்டும். உலக நாவல் இலக்கியத்தில் பல்வேறு

69