பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"எழுத்து" எவ்வகையில் இலக்கியப் பணிபுரிந்தது என்பதை இங்கு இந்த இரு இதழ்களின் கட்டுரைகள் புலப்படுத்தும். வல்லிக்கண்ணன் தன்னுடைய . இலட்சிய இலக்கியவாதியான சி.சு. செல்லப்பாவிற்கு இக்கட்டுரைத் தொகுதியை நன்றியுடன் கொண்டு வருகிறார். சி.சு. செல்லப்பா தனக்கு கிடைத்த 'விளக்கு' அமைப்பு பரிசு தொகையின் மூலம் அவரே எழுதிய "என் சிறுகதை பாணி" என்ற நூலை 1395ல் வெளிக்கொண்டு வருகிறார். சி.சு. செல்லப்பாவின் “சுதந்திர தாகம்" என்ற நாவலை 3 பாகங்களாக அவரே 1.7.97ல் தனது எழுத்து வெளியீடு மூலம் கொண்டு வருகிறார், பி.எஸ். ராமையாவை சி.சு. செல்லப்பா மிகவும் மதித்துப் போற்றுவதோடு, தன் இலட்சிய வாதியாகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்டு அவரது நினைவு போற்றும் வகையில் தன் சொந்தச் செலவிலேயே 15.7.98ல் “ராமையாவின் சிறுகதை பாணி" என்ற நூலை தனது 86வது வயதில் எழுத்து பிரசுரமாக வெளியிடுகிறார், 18.12.98ல் இலக்கிய உலகிலிருந்தும், இவ்வுலகிலிருந்தும் மறைந்து விடுகிறார். இறுதி ஆண்டுகளில் அவர் நிறைவேற்றிய சாதனைகள் மகத்தானவை. வியந்து போற்றப் பட வேண்டியன.

இக்கட்டுரைத் தொகுப்பு இலக்கிய வாசகர்களின் தமிழ் இலக்கியத் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். தற்கால சிறிய பத்திரிகைகளுக்கு வழிகாட்டியாகவும், எதிர்காலத்தில் எழுத்தை விட சிறந்த தமிழ் இலக்கிய பத்திரிகை வாடிப்பத்திரிகையாக ஓர் இதழ் தோன்ற ஓர் உந்துதலாகவும் இது அமையக்கூடும் என்றும் நம்புகிறேன். விமர்சனங்கள் - விமர்சிக்கின்றவரின் மீது விமர்சனங்கள் காணும் போக்கு விடுத்து, கதை மாந்தர்களின் மீது மட்டும் விமர்சனம் அமையுமானால் தமிழில் விமர்சனக் கலை மேலும் சிறக்கும். புதுக்கவிதைப் பணியை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இது எழுத்தின் சாதனைகளில் முக்கியமானது; முதன்மையானதும் கூட. இக்கட்டுரைத் தொகுப்பை உரிய நேரத்தில் அச்சிட்டுக் கொடுத்த ராஜ் எண்டர்பிரைஸஸுக்கும், சி.சு. செல்லப்பா படங்களை கொடுத்து உதவிய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பர் 2001

அ. நா. பாலகிருஷ்ணன்