இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்துரர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளன. சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் வழங்கிவந்தது. அங்கேதான் பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான்.
பாரி சிறிய நாடு ஒன்றுக்குத் தலைவன். வேளிர் பலர் அக்காலத்தே அங்கங்கே இருந்தார்கள். அவருள் ஒருவன் அவன். அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர். பறம்பு மலையை நடுவே உடையதாக விளங்கியமையால் நாட்டுக்கும் பறம்பு என்று பெயர் அமைந்தது. அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன.
அந்தக் காலத்தில் பறம்பு மலை நல்ல வளமுடையதாக இருந்தது. எங்கே பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருந்தன. பலாமரங்கள் குலைகுலையாகப் பழங்களுடன் நின்றன. மரத்துக்கு மரம் தேன் கூடுகள் அடை அடையாக இருந்தன. மலைப்பாறைகளிலும் பெரிய பெரிய தேனிருல்கள் தேனை ஊற்றுப்போல ஒழுக விட்டுக்கொண்டு பரந்திருந்தன. வண்ணவண்ண மலர்கள் காணக் காண இனியனவாய் மலர்ந்திருந்தன. மலைப் பாறைகளில் அருகருகே பல சுனைகள் தெளிந்த நீரோடு விளங்கின. மலைவளம் சிறந்திருந்த பறம்பு மலையில் ஓரிடத்தில் பாரி சிறிய அரண்மனையைக்