பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
பாரி

கட்டிக்கொண்டிருந்தான். வேறு ஓரிடத்தில் சிவபெருமானுக்குரிய கோயில் இருந்தது.

பாரிவேள் வீரத்திலே சிறந்தவன்; பண்பிலே நிறைந்தவன்; தமிழ்ப் பாவின் நயம் தேர்வதில் பெரியவன்; எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடையிலே இணையற்றவன். பாரி என்றவுடன் முதலில் அவனுடைய ஆட்சி நினைவுக்கு வருவதில்லை; அவன் வீரம் நினைவுக்கு வருவதில்லை; அவனுடைய வள்ளன்மையே மக்களின் உள்ளத்திலே தோன்றியது.

எத்தனையோ புலவர்கள் அவனிடம் வந்து வந்து அவனுடைய உபசாரத்தையும் விருந்தையும் பெற்று அளவளாவினர்கள்; அவனுடன் இருந்து தமிழ் நூல்களின் நயத்தை நுகர்ந்தார்கள்; அவனுடைய சிறப்பைப் புதிய பாடல்களால் பாடினர்கள்; விடை பெற்றுச் செல்லும்போது மன நிறைவையும், உவகையையும், நன்றியறிவையும், பலவகைப் பரிசில்களையும் தாங்கிச் சென்றார்கள். புலவர்களுக்கு அவன் உணவு தருவான்; உடை தருவான்; பொருள் தருவான். ஒர் ஊர் முழுவதையும் புலவருக்கு அளித்து அதில் வருகின்ற வருவாயை நுகரும்படி செய்வான்.

யாரேனும் புதிய புலவர் ஒருவருடைய பழக்கம் அவனுக்குக் கிடைத்தால் அதைப் பெரும் பேருகக் கருதி இன்புற்றான்; ஏதோ புதிய நாட்டைப் பெற்றவனைப் போன்ற களிப்பை அடைந்தான்.

மதுரை மாநகர்ச் சங்கத்தில் தலைமைப் புலவராகக் கபிலர் விளங்கின காலம் அது. பாரிவேளுக்கு அவருடைய பழக்கம் வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. பாண்டியனால் சிறப்புப் பெற்று விளங்கும் பெரும் புலவராகிய அவர் தன்னை நாடிவருவார் என்று எதிர்