8
எழு பெரு வள்ளல்கள்
பார்ப்பது பேதைமை என்று எண்ணினான் பாரி. ஆகவே தக்க அறிஞர் ஒருவரை மதுரைக்கு அனுப்பிக் கபிலரைக் காணச் செய்தான். கண்டு, அவரைச் சந்தித்து இன்புறவேண்டும் என்று தனக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிவித்து, பறம்பு மலைக்கு வரவேண்டும் என்று அழைக்கச் சொன்னான். சென்றவர் கபிலரிடம் பணிவான சொற்களைக் கூறிப் பாரியினுடைய ஆர்வத்தைத் தெரிவித்தார். கபிலர் வருவதாகச் சொல்லி அனுப்பினர். அப்படியே சென்றார்.
பாரிவேள் கபிலருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தான். கபிலரைக் கடவுளாகவே எண்ணி வழிபட்டான். அவனுடைய பேரன்பை அறிந்த கபிலர் மனம் உருகினர். அடிக்கடி அங்கே வந்தார். இருவருக்குமிடையே இருந்த அன்பு சிறந்த நட்பாக உருவாயிற்று. அதன் பயனாகக் கபிலர் மதுரையை விட்டுவிட்டுப் பறம்பு மலைக்கே வந்து விட்டார். பாரிக்குத் துணைவராகவும், ஆசிரியராகவும், அவைக்களப் புலவராகவும் விளங்கலானர்.
பாரிவள்ளலின் உயர்ந்த பண்புகளில் ஈடுபட்டார் புலவர். அவனுடைய கொடைத்திறத்தைக் கண்டு வியப்படைந்தார். அவனுடைய குணங்களை அருமையான பாடல்களால் பாராட்டினர்.
பறம்பு நாட்டில் அடர்ந்த காடுகளும் இருந்தன. பாரிவேள் அவ்வப்போது தன் நாட்டு மக்களைக் கண்டு அளவளாவி விட்டு வருவான். மலையின்மேல் உள்ள மலைவளத்தைக் கண்டு மகிழ்வது போலவே கீழே உள்ள காட்டு வளத்தையும் கண்டு களிப்பான்.
ஒருநாள் காடு அடர்ந்த ஓரிடத்திற்குச் சென்றான் பாரி. காட்டினிடையே தேர் செல்லுதற்கு ஏற்ற