பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

எழு பெரு வள்ளல்கள்

தாலும் பற்றுக்கோடாக நிறுத்த வேண்டும். என்ற எண்ணமே முன் நின்றது. தேர் இல்லாவிட்டால், அவனே அங்கே நின்றிருப்பான்!

பாரி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். முல்லை பற்றுக்கோடு பெற்றுப் படர்ந்த அழகைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். அந்த வள்ளலின் சீரிய பண்பை எண்ணி எண்ணி அவனுடன் நடந்து கொண்டிருந்தான் தேர்ப் பாகன். குதிரைகளோ நேரே பறம்புமலையின் அடிவாரத்தை நாடிச் சென்றன.

அங்கே இருந்த குடிமக்கள் குதிரைகளை மாத்திரம் கண்டார்கள். பாரியின் தேர் என்ன ஆயிற்று, அவன் என்ன ஆணான் என்ற கேள்விகள் எழுந்தன. அவர்கள் என்ன நிகழ்ந்ததென்று அறிந்துகொள்ளப் புறப்பட்டு வந்தபோது இடை வழியிலே பாரியையும் பாகனையும் சந்தித்தார்கள். பாகன் வாயிலாகப் பாரியின் செயலை அறிந்து வியந்தார்கள்; உள்ளம் நெகிழ்ந்தார்கள். முல்லைக் கொடி இருந்த இடம் சென்று ஒரு பந்தலை அமைத்து அதைப் படரவிட்டுத் தேரை இழுத்து வந்தனர் சிலர்.

காட்டுக்கு நடுவே பாரியின் உள்ளத்தைக் கனிவித்த முல்லைக் கொடி, வேறு எதற்கும் இல்லாத சிறப்புடன் பந்தலில் படர்ந்தது. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்ற வியப்புக்குரிய செய்தி தமிழுலகம் முழுவதும் படர்ந்தது. புலவர்கள் புகழ்ந்தனர்; மன்னர்கள் பாராட்டினர்கள். அன்று முதல் ‘முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல்’ என்று யாவரும் பாரியை வழங்கலானார்கள்.